Skip to main content

கொள்முதல் செய்த விளைபொருட்களுக்கு மூன்று மாதமாக பணம் கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள்

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
Farmers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ளது அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம். உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் விளைவிக்கும் நெல், கம்பு, மக்காசோளம், உளுந்து, எள், மணிலா போன்ற தானியங்களை உளுந்தூர்பேட்டையில் உள்ள மார்க்கெட் கமிட்டியில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அதற்கு பணம் பெற்று செல்வது நடைமுறையில் உள்ளது.

 

இந்த கமிட்டிக்கு வரும் விளைபொருட்களை வாங்குவதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் கொடுத்த விளைபொருட்களுக்கு இன்று வரை கமிட்டி அதிகாரிகள் பணம் கொடுக்கவில்லை. சுமார் 25 லட்ச ரூபாய் விவசாயிகளுக்கு தர வேண்டிய பணம் நிலுவையில் உள்ளது. தங்கள் விளைபொருட்களை கொடுத்துவிட்டு தினசரி தங்கள் ஊர்களிலிருந்து உளுந்தூர்பேட்டை கமிட்டிக்கு பணம் கேட்டு நடையாய் நடக்கிறார்கள். 'இன்று போய் நாளை வா' என்று விவசாயிகளை அலைக்கழித்து வருகிறார்கள் கமிட்டியில் உள்ள அதிகாரிகள். இதே நிலை நீடித்தால் கமிட்டி முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள்.

 

கரோனா நோய் ஒரு பக்கம் எங்களைத் துரத்துகிறது. நாங்கள் கொடுத்த விளை பொருட்களுக்கு பணம் கேட்டு வந்தால் கமிட்டி அதிகாரிகள் எங்களை வெளியே துரத்துகிறார்கள். இதுகுறித்து வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் உடனடியாக பணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என பரிதாபமாக கேட்கிறார்கள் விவசாயிகள்.
 

சார்ந்த செய்திகள்