உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.
அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில் 53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.
அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.