திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சொந்த ஊராகக் கொண்டவர் ஜெயலட்சுமி. இவர், திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மகன் ராஜேஷ், இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் டொனேஷன் கேட்பதால் ஸ்காலர்ஷிப்புடன் குறைந்த செலவில் படிப்பதற்காக உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தார்.
ராஜேஷ், உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் தேர்வுகள் முடிந்து தாயகம் திரும்புவார் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கியது. அதனால், உக்ரைன் முழுவதும் போர் சூழல் நிலவிவருகிறது. அதேபோல், ராஜேஷ் உள்ள பகுதியில் போர் தீவிரமாக உள்ளதால் சுமார் 500 மாணவர்களுடன் பாதாள அறையில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் சிவராசுவின் காலில் விழுந்த ராஜேசின் தாய் ஜெயலட்சுமி, தனது மகனை எப்படியாவது மீட்டுத் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர், ஆறுதல் கூறி உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளதால் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினார்.