கொரோனா வைரஸால் தமிழக சினிமா துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. வருடத்துக்கு பல ஆயிரம் கோடி புழங்கும் இத்துறை முற்றிலும் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்த தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் பல லட்சம் குடும்பங்கள் பெரும் துயரம் அடைந்து வருகின்றன.
அமைப்புசாரா தொழிலாளர்கள், 100 நாள் வேலைத் திட்டத்தின் பலனாளிகள் உள்ளிட்ட தினக்கூலிகளை கணக்கிட்டால் சுமார் 4 கோடி பேர் தமிழகத்தில் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இந்த பட்டியலில், சினிமா துறையில் இருக்கும் தொழிலாளிகளும் அடங்குவார்கள். சினிமா துறையும் கொரோனாவால் முடங்கிப் போயிருக்கும் சூழலில் அந்த துறையிலுள்ள பெப்சி தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
அவர்களின் தினசரி வாழ்க்கையை காப்பாற்றவும் பாதுகாக்கவும் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார். முன்னதாக, இந்த தொழிலாளர்களின் நலன்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தமிழக மக்களுக்காக பொது வெளியில் நிதி திரட்டும் எடப்பாடி அரசு, பணம் படைத்தவர்கள் தாராளமாக நிதி உதவி அளித்து மக்களை பாதுகாக்கும் கடமையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கோடி கோடியாக சம்பளம் வாங்கும் தமிழக நடிகர்-நடிகைகள் இப்போது வரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி உதவி அளிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். தமிழக ரசிகர்களால் ஆடம்பர வாழ்க்கையும் கோடி கோடியாக சம்பளத்தையும் அனுபவிக்கும் ஹீரோக்கள் யாருக்கும் கொடுக்கும் மனது இல்லாதது தமிழகத்தின் துரதிர்ஷ்டம்.