
நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளோடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். மதியம் 1.30 மணி வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ''நீட் தேர்வை ஏற்க முடியாது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்'' என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் ''ஏற்கனவே தமிழக அரசு செயல்படுத்தி வரும் இடஒதுக்கீடு முறையை நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம்'' எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பொருளாதாரத்தில் நலிந்த, முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.