கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது பு. கிள்ளனூர் கிராமம். இந்தக் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில், பல ஆண்டுகளாகப் பூசாரியாக இருந்து வந்தவர் (60 வயது) பூமாலை. இவர், நேற்று முன்தினம் எ. குரும்பூர் கிராமத்திற்கு உறவினர்களைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது வழியில் உள்ள ஒரு குளத்தில் தடுமாறி விழுந்துள்ளார். குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போயுள்ளார். இந்தத் தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று பூமாலையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பூமாலை இறந்துபோன தகவல் கேள்விப்பட்டு பு. கிள்ளனூர் கிராம மக்கள் அவரது உறவினர்கள் பூசாரியின் சடலத்தை எங்கள் கிராமத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன்பு திரண்டு நின்றனர். அதே நேரத்தில் அ. குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்களும் பூசாரியின் சடலத்தை எங்களிடம்தான் தரவேண்டும், நாங்கள் எங்கள் கிராமத்தில் அடக்கம் செய்து கொள்கிறோம் என்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இறந்துபோன பூசாரியின் உடலுக்கு இரு கிராம மக்கள் உரிமை கொண்டாடிய செய்தி உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டு திகைத்துப்போன உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், இரு தரப்பு மக்களையும் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். காவல்துறை வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில் பூசாரி பூமாலையின் சடலத்தை முதலில் குரும்பூர் கிராமத்திற்கு எடுத்துச் சென்று அங்கு இறுதிச் சடங்குகள் செய்வது என்றும் அதன்பிறகு கிள்ளனூர் கிராமத்திற்கு எடுத்துச் சென்று அந்த கிராம மக்கள் அஞ்சலி செலுத்தியதும் அங்கேயே அடக்கம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் இந்த தீர்ப்பைக் கேட்டு இரு கிராம மக்களும் ஒப்புக்கொண்டு கலைந்து சென்றனர்.