ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிக அளவு செம்மரம் இருக்கின்ற பகுதியாக ஆந்திராவின் சில மாவட்டங்கள் உள்ளன. இந்த மரங்களின் சந்தை மதிப்பு மிக அதிகம் என்பதால் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு இந்த மரங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகப் பணம் தருவதாகக் கூறி ஆட்களைத் திரட்டி ஆந்திராவைச் சேர்ந்த சிலர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவங்கள் தொடர்கதையான நிலையில், மரம் கடத்தலில் ஈடுபடுவோர் மீது அம்மாநில காவல்துறை சில ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்தியாவில் பெரிய அதிர்வை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்தனர். இதற்கிடையே இன்று காலை செம்மரம் கடத்தியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த பெருமாள், வேலு ஆகியோரை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் தப்பியோடிவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.