புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே போசம்பட்டி கிராமத்தில் இரு தரப்பினர் அரிவாள், கட்டைகளுடன் மோதிக்கொண்ட சம்பவத்தில் 14 பேர்கள் வரை காயமடைந்துள்ளனர். மோதலைக் கட்டுப்படுத்த கே.புதுப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு திருச்சி மண்டல டி.ஐ.ஜி., புதுக்கோட்டை எஸ். பி. பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.
போசம்பட்டி கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே தேர்தல் சம்மந்தமான பிரச்சனை இருந்துள்ளது. அனைவரும் உறவினர்கள் தான் என்றாலும் தேர்தல் இவர்களைப் பிரித்து வைத்துள்ளது. இந்தப் பிரச்சனை காரணமாக அடிக்கடி உரசல்கள் இருந்துள்ளது. லேசான உரசல்கள் நேற்று பலமான மோதலாக வெடித்துள்ளது. இதில் சிலர் காயமடைந்துள்ள நிலையில் இன்றும் அதே பிரச்சனைக்காக மறுபடியும் இரு தரப்பினரும் அரிவாள், கட்டைகள், கல் கொண்டு தாக்கிக் கொண்ட சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ள தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற எஸ்.ஐ. சரவணன் மோதலை நிறுத்தச் சொல்லி நீண்ட நேரம் போராடியும் யாரும் கேட்காத நிலையில் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தன் கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார்.
துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு மோதிக் கொண்டவர்கள் அமைதியடைந்துள்ளனர். இந்த மோதலிலும் பலர் காயமடைந்துள்ளனர். இதுவரை 14 பேர்கள் வரை காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தக் கிராமத்தில் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறத்து தகவல் அறிந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரனை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி.யும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார்.
இதைப் போல சில வருடங்களுக்கு முன்பும் இதே பகுதியில் சில சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.