கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.
இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.