விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாதாள சாக்கடை பணியின்போது இரண்டு தொழிலாளர்கள் மண் சரிந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மாநகராட்சியில் கடந்த ஓராண்டாக பாதாள சாக்கடை பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட முக்குராந்தல் பகுதியில் பணி நடைபெற்று வந்தது. ஒப்பந்த அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மண்ணை அள்ளும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது எதிர்பாராத விதமாக மண் சரிந்து கொட்டியது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் இரண்டு மணி நேரமாக போராடி இந்த சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு பேரை சடலமாக மீட்டனர். அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.