சென்னை அடுத்த சேலையூர், எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 33). இவர் ஊர்ப்பக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் இவரது செல்போனுக்கு தொடர்புகொண்ட சாமி என்பவர் பத்திரிகையில் வேலை செய்வதாக கூறி, உங்கள் நிறுவனத்தில் கட்டப்படும் கட்டிடம் ஒன்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அணைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது எனவே பத்திரிகையில் செய்தி வெளியிட போகின்றோம். இந்த செய்தியை வெளியிடக்கூடாது என்றல் ஒரு லட்சம் பணம் கொடுங்கள் என தெரிவித்துள்ளார்.
பணத்தை தருவதாக இருந்தால் நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் பகுதியில் வந்து தொடர்புகொள்ளுங்கள் அங்கு எங்கள் சப்-எடிட்டர் கண்ணன் என்பவரை அனுப்புகின்றோம் அவரிடம் பணம் கொடுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஜீவரத்தினம் நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் பகுதிக்கு சென்று அங்கிருந்து சாமிக்கு தொடர்புகொண்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து சில மணிநேரங்களில் கண்ணன் என்பவர் அங்கு வந்து ஜீவர்தினத்தை சந்தித்து சாமி செல்போனில் கூறியதுபோல் கூறி ஒருலட்சம் பணம் கேட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் அதிகமாக உள்ளது என ஜீவரத்தினம் கூற, பின்னர் 15 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என கண்ணன் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து பணத்தை தயார்செய்துவிட்டு தொடர்புகொள்ளுவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு வந்த ஜீவரத்தினம் சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்போது போலீசார் ஜீவராதீனமிடம், சாமிக்கு தொடர்புகொண்டு பணம் தயார்செய்துவிட்டேன் சேலையூர் பகுதியில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கூறச்சொல்லியுள்ளனர். இதனையடுத்து அதைப்போல ஜீவரத்தினம் சாமியிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு சாமி கண்ணனை அனுப்புகிறேன் அவரிடம் பணத்தை கொடுத்துவிடுங்கள் என கூறி கண்ணனை சேலையூர் பகுதிக்கு அனுப்பியுள்ளார். அப்போது ஜீவராதீனமிடம், கண்ணன் பணம் பெற முயற்சித்தபோது அங்கு மறைந்து கண்காணித்துக்கொண்டிருந்த போலீசார் கண்ணனை மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து, அவர் மூலம் சாமியை பிடித்து இருவரிடம் விசாரித்ததில் அவர்கள் சென்னை,எம்.ஜி.ஆர் நகர், விவேகானந்தர் தெருவை சேர்ந்த சாமி (எ) கருப்புசாமி (35), விருகம்பாக்கம், காந்திநகர் பிரதனசாலையை சேர்ந்த கண்ணன் (43) எனவும் இவர்கள் இதேபோல பலரிடம் பத்திரிகையாளர்கள் என கூறி மிரட்டி பணம் பறித்துவந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைதுசெய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.