திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அமைந்துள்ளது காரம்பாடு. இந்த கிராமத்தில் உள்ள ஓடைக்கரை சுடலைமாடசாமி கோயில் கொடை விழாவானது, கக்கன் நகரைச் சேர்ந்தவர்கள் தலைக்கட்டு வரியின் மூலம் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று நள்ளிரவில் சுடலைமாடசாமி கோயில் கொடை விழா நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பெண்கள் கோயிலருகே குலவையிட்டபடி பொங்கலிட்டுக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கத்தில் கரகாட்ட நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே, திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் கத்தியால் மற்றொரு பிரிவைச் சேர்ந்த மதிராஜா, மதியழகன் என்ற அண்ணன், தம்பியை குத்தி கொலை செய்துள்ளார். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மற்றொரு சகோதரர் மகேஷ்வரன் படுகாயம் அடைந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை பொறுப்பு எஸ்.பி.யான சுந்தரவதனம் உள்ளிட்ட போலீசார், இரட்டைக் கொலை குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திசையன்விளை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரம்பாடு கிராமத்தின் ஒரே தெருவில் வசிக்கிற முருகன் குடும்பத்திற்கும், முருகேஸ்வரி குடும்பத்துக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடராபாக முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக இரட்டைக் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்ற நிலையில், முழுகேஸ்வரி மகன்களான ராஜ்குமார், விபின் மற்றும் வருண்குமார் ஆகிய மூன்று பேர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, திருவிழாவில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக காரம்பாடு கிராமத்தில் விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
படுகொலை செய்யப்பட்ட சகோதரர்களான மதிராஜனும், மதியழகனும் லாரி டிரைவர்களாக வேலை செய்து வந்துள்ளனர். இந்த துயர சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு முருகேஸ்வரி மகன்களில் கைது செய்யப்பட்ட ஒருவரின் மனைவியுடன் மதியழகனுக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், முருகேஸ்வரி குடும்பத்தினர் மதியழகனின் குடும்பத்தினரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இப்படி, 2 முறை இந்த இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்சனை வெடித்த நிலையில், சுடலைமாடசாமி கோயில் கொடை விழாவில் இது இரட்டைக் கொலையாக முடிந்ததாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு பேர் வரை கைது செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தி தகவல் தெரிவித்தார். இதனிடையே, நீதி கிடைக்காத வரை உடல்களைப் பெறப்போவதில்லை என்று உறவினர்கள் திரண்டு போராட்டம் நடத்திய நிலையில், போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு எட்டவே.. கொலைசெய்யப்பட்டவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.