கடந்த பிப்ரவரி மாதம் முதல்வரின் பாதுகாப்பு பணிக்குச் சென்றிருந்த மாவட்ட காவல்துறை பெண் கண்காணிப்பாளருக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்பியாக அப்போது இருந்த கண்ணன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். இது சம்பந்தமான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கை நீதிபதி கோபிநாதன் விசாரித்துவருகிறார்.
தற்போது இது சம்பந்தமான வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் (15.12.2021) குறுக்கு விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கு தொடர்பான குறுக்கு விசாரணை நேற்றும் தொடர்ந்து நடைபெறுமென நீதிபதி அறிவித்தார். அதன்படி நேற்றும் விசாரணை நடைபெற்றுவருவதாக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
அதன்படி, நேற்றும் இரண்டாவது நாளாக பெண் எஸ்பியிடம் ரகசிய அறையில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டு காலை 11 மணிக்கு துவங்கிய குறுக்கு விசாரணை, மாலை ஐந்து முப்பது மணிவரை நடந்தது. இந்த வழக்கை விழுப்புரத்தில் நடத்தக் கூடாது, வெளி மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று சிறப்பு டிஜிபி தரப்பில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டது. ஆனால், விழுப்புரம் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டதையடுத்து தற்போது இந்த வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாக வழக்கறிஞர்கள் தரப்பில் கூறுகின்றனர்.