தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவித்த கஞ்சா மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு ஆபரேஷன் 2.0- வை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து மதுரை சுற்றுப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதற்காக பேப்பர் கொண்டு செல்லும் லாரியில் மறைத்து கஞ்சாவை கடத்திச் செல்வதாக காவல்துறை எஸ்.பி. ரோஹித் கிடைத்த ரகசிய தகவலின் படி, திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு காவல்துறையினர் டி.எஸ்.பி. புகழேந்தி மேற்பார்வையில் காவல்துறை ஆய்வாளர் சத்யா தலைமையில் வேடச்சந்தூர் காக்காத்தோப்பு பிரிவு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக, வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் பேப்பர் பண்டல்கள் நடுவில் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போதைப்பொருள் நுண்ணறிவுக் காவல்துறையினர் சங்ககிரியைச் சேர்ந்த அருண்குமார், பர்கூரைச் சேர்ந்த சண்முகம் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான 215 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.