Skip to main content

ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்ற இருவர் கைது!

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

Two arrested for selling online lottery tickets

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் ஆன்லைன் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பெயரில் உதவி ஆய்வாளர் ஆனந்த ராஜன் தமிழ்மணி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன், காவலர்கள் ஜனார்த்தனன், கோபால், செந்தில் பூபால் உட்பட ஏராளமான போலீசார் நகரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

பூதேரி கோட்டைமேடு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு காரை சோதனை செய்தனர். அந்த காரில் இருந்தபடியே கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் நேரடியாகவும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்தவர்களிடம் போலீசாரின் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் திண்டிவனம் தமிழ் நகரை சேர்ந்த ரஹமதுல்லாஹ், சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் ஆகிய இரு இளைஞர்களும் என்பது தெரிய வந்தது.

 

இவர்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையை நடமாடும் காரில் இருந்தபடி, விற்பனை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு லேப்டாப், இரண்டு செல்போன்கள், சொகுசு கார், லாட்டரி விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு அந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆன்லைன் லாட்டரி விற்பனை மூலம் பலர் பணத்தை இழந்து நடுத்தெருவில் தவிக்கின்றனர். 

 

இதுபோன்று பல்வேறு நகரங்களில் காவல்துறைக்கு தெரியாமல் நடமாடும் வாகனங்களில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடந்து கொண்டு தான் உள்ளது எனவே காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்