அரியலூர் மாவட்டம் விறகாலூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை (6411)இயங்கி வருகிறது இந்தக் கடையின் மேற்பார்வையாளர் ரமேஷ் கடந்த 14ஆம் தேதி வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் மதியம் 12:00 மணி அளவில் டாஸ்மாக் கடையை வழக்கம் போல் திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு ரமேஷ் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது 24 அட்டைப் பெட்டிகளில் இருந்த 1152 மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். இது குறித்து உடனடியாக ரமேஷ் கீழப்பழுவூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவம் இடம் வந்து ஆய்வு செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து அரியலூர் டிஎஸ்பி சங்கர் கணேஷ், ஆய்வாளர் அன்பரசு தலைமையில் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களைப் பிடிப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
போலீசார் விசாரணையில் சம்பவத்தன்று பாரின் காவலாளியை தாக்கிவிட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தகவலின்படி தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அம்மன் பேட்டை சேர்ந்த ரத்தினம், மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பூலாம்பட்டி மாரிமுத்து, தஞ்சை மாவட்டம் மணக்கரம்பை சேர்ந்த எபினேசர் ஆகிய மூவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, மாரிமுத்து, ரத்தினம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 672 மது பாட்டில்கள், 6700 ரூபாய் பணம், மூன்று அரிவாள், இரண்டு கடப்பாரை, அவர்கள் பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகி விட்ட எபினேஸரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.