Skip to main content

மூதாட்டியை கடத்தி கொன்ற இருவர் கைது! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Two arrested in old lady passed away case

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகிலுள்ள பாக்கம் புதூர் கிராம சுடுகாட்டில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் மர்மமாக புதைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். 


இந்நிலையில், புதைக்கப்பட்ட பெண்ணுடல் அதே பகுதியில் உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி ஆண்டாள்(60) என்பதும், இவரது கணவர் இறந்துவிட்டதால் தனது மகள் தனலட்சுமியுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. கொலை செய்து சுடுகாட்டு பகுதியில் புதைத்த சம்பவத்தன்று அப்பகுதியில் செயல்பட்ட மொபைல் போனில் பேசியவர்களின் சிக்னலை வைத்து சம்பந்தப்பட்ட செல்போன் எண்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். 


அதில் விரியூரைச் சேர்ந்த வீராசாமி(55) மற்றும் அவரின் மகன் விக்னேஷ்(25). ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை செய்தனர். அதில் ஆண்டாள் மகள் தனலட்சுமி  அப்பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார். வீராசாமி புதிதாக அரிசி கடை தொடங்க முடிவு செய்து, அதற்காக தனலட்சுமியிடம் ரூ.15 லட்சம் பணம் கொடுத்து அரிசி வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அந்தப் பணத்தை வாங்கிய தனலட்சுமி, அரிசி வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீராசாமி அரிசி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தையும் திருப்பித் தராமல் தனலட்சுமி காலம் தாழ்த்தி வந்துள்ளார். 


கடந்த 7ஆம் தேதி வீராசாமியும், விக்னேஷும் பணம் கேட்பதற்காக தனலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தனலட்சுமி வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமியின் தாய் ஆண்டாளை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று கடந்த 18ஆம் தேதி வரை யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்துள்ளனர். ஆனாலும், தனலட்சுமி தன் தாயைத் தேடி வரவில்லை. அடைத்து வைத்திருந்த ஆண்டாளை வெளியே விட்டால் அவர் போலீஸிடம் தெரிவித்துவிடுவார் என அஞ்சி கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 

 

அதன்படி 18-ஆம் தேதி மதியம் ஆண்டாளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்களது நண்பர் திருவண்ணாமலை மாவட்டம், அல்லப்பனூரைச் சேர்ந்தவரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். அவரது ஆலோசனையின்படி ஆண்டாளின் முகத்தை அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைத்து ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, பாக்கம் புதூர் சுடுகாட்டில் கொண்டு வந்து சம்பவத்தன்று இரவோடு இரவாக புதைத்துவிட்டு சென்றுள்ளனர். இதை போலீசாரிடம் தந்தை-மகன் இருவரும் வாக்குமூலமாக அளித்துள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வீராசாமியையும் அவரது மகன் விக்னேஷையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்