Skip to main content

தொடரும் பள்ளிக்கட்டண கொள்ளை! புகார் கொடுத்த பெற்றோருக்கு கொலைமிரட்டல்! ஆடியோ- வீடியோ ஆதாரம்!- Exclusive

Published on 11/06/2019 | Edited on 14/06/2019

பெற்றோர்களின் போராட்டம்… பொதுப்பள்ளிக்களுக்கான மாநிலமேடை அமைப்பின் சட்டப்போராட்டங்களைத் தொடர்ந்து… தமிழகம் முழுக்க தனியார்ப்பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டாலும் புதிய புதிய வடிவங்களில் நூதனமுறையில் கொள்ளையடித்துக்கொண்டுதான் இருக்கின்றன தனியார்ப் பள்ளிகள். இதுகுறித்து, புகார் கொடுத்த பெற்றோரையே கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் ஆடியோ- வீடியோ ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது. இதுகுறித்து, நாம் மேலும் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் தமிழ்நாடு முழுக்க தனியார் பள்ளிகளில் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கின்றன தனியார்ப் பள்ளிகள் என்பது தெரிய ஆரம்பித்தது.   

 

PRIVATE


கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததால் மிரட்டலுக்குள்ளான முகமது யுனூஸ் நம்மிடம், “என் அண்ணன் பிள்ளைகள் 2 பேர். தங்கச்சி பிள்ளைகள் 3 பேர். ஆகமொத்தம், 5 பேர் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா பேட்மாநகரத்திலுள்ள எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த, 2019 ஏப்ரல்-26 தேதி பள்ளியிலிருந்து வந்த அறிக்கையின்படி நிர்ணயித்த கட்டணத்தைவிட சுமார் 10,000 ரூபாய்க்குமேல் கூடுதலாக பட்டியிலிட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்தோம். உடனே, ஏப்ரல்- 30 ந்தேதி மதியம்  1:07 மணிக்கு சி.இ.ஓ. (மாவட்ட கல்வி அலுவலர்) ஆஃபிஸுக்கு ஃபோனில் தொடர்புகொண்டு பேசினோம். டி.இ.ஓ. ஆஃபிஸிலுள்ள  சப்-இன்ஸ்பெக்டர்  தர்மராஜின்  ஃபோன் நம்பரை கொடுத்து பேசச்சொன்னதால் அவரிடம் விவரங்களைச் சொன்னோம்.  அதோடு, ‘இப்போதைக்கு இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் எங்களது விவரத்தை சொல்லிடாதீங்க. எங்களை மிரட்டி டி.சி. வாங்கிட்டுப்போக சொல்லிடுவாங்க. அதனால, மனு கொடுத்தபிறகு சட்டரீதியாக நடவடிக்கை எடுங்க’ என்று அவரிடம் மிகவும் தாழ்மையான வேண்டுகோளை வைத்தோம்.

 

PRIVATE



ஆனால், அடுத்த ஒரு மணிநேரத்தில்  நாங்கள் புகார் தெரிவித்த பள்ளியின் அறங்காவலர் எஸ்.எம்.பி. சாஹுல் ஹமீதுவிடமிருந்து ஃபோன் வந்தது. அதிர்ச்சியாகிப்போய் அட்டெண்ட் செய்தபோது, “யாருப்பா சி.இ.ஓ. ஆஃபிஸுக்கு ஃபோன் பண்ணினது? உனக்கு புகார் கொடுக்க ரைட்ஸ் இல்லை’ என்று நீ வா போ என ஒருமையில் ஆவேசமாக பேசினார்.  ‘பிள்ளைகளின் சித்தப்பா, தாய்மாமன் என்ற அடிப்படையில் எனக்கு பேச உரிமை இல்லையா?’ என்று கேட்டுவிட்டு எனது தங்கச்சியின் கணவரை அவரிடம் பேசச்சொன்னேன்” என்றவர் அவர்கள் பேசிக்கொண்ட ஆடியோவை நம்மிடம் கொடுத்தார்.

 

 

PRIVATE



அந்த ஆடியோவில் பேசும் பள்ளி நிர்வாகி எஸ்.எம்.பி. சாஹுல் ஹமீது எடுத்தவேகத்தில்,  “ஃபீஸ் அதிகமா இருந்தா வேற ஸ்கூலில் சேர்த்துக்கோங்க” என்றதோடு…  “கிரிமினல் வேலைய காண்பிச்சா நாங்களும் காட்டுவோம். பிள்ளைகள கூட்டிக்கிட்டுப்போங்க. நான், சேர்க்கமாட்டேன்னு முடிவுபண்ணிட்டா எங்க போனாலும் ஒண்ணும் பண்ணமுடியாது” என்று மிரட்டலாக பேசுகிறார். இதனால், மாவட்ட ஆட்சியர், நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணய கமிட்டி என கல்வித்துறை சார்ந்த அனைவருக்கும் புகார் அனுப்பிய முகமது யூனூஸ் நம்மிடம், “தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் ‘கால் யுவர் கலெக்டர் என்ற தனிப்பிரிவு 86808 00900 எண்ணுக்கு புகார் கொடுத்ததால், அவர்களின் உத்தரவின்படி 2019  மே-23 ந்தேதி காலை 11 மணிக்கு டி.இ.ஓ.  மற்றும் கல்வித்துறை சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜனும் எம்.எம். பள்ளிக்கு வந்து அட்மினிஸ்ரேஷன் விஜயனிடம் விசாரணை செய்தார்கள். புகார் தெரிவித்துவிட்டு பள்ளி நிர்வாகத்திடம் சொல்லவேண்டும் என்று சொன்னபிறகும் கல்வி அதிகாரி தர்மராஜன் பள்ளி நிர்வாகத்திடம் போட்டுக்கொடுத்தது ஏன்? அரசால் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிக்கட்டண விவரங்களை சட்டப்படி பள்ளியில் ஒட்டிவைக்காதது ஏன்? மாணவர்களிடம் புத்தகங்களுக்கு இவ்வளவு தொகைதான் வசூலிக்கவேண்டும் என்று அரசு நிர்ணயித்த தொகையைவிட மிக மிக மிக பலமடங்கு பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது ஏன்? என்று கேட்ட கேள்விகளுக்கு முறையான பதிலை கொடுக்கவில்லை.

 

PRIVATE



ஆனால், 29ந்தேதி மதியம் 2 மணிக்கு நான் வேலை செய்யும்  கடைக்கு வந்த,  ரத்தினக்குமார், செங்கோட்டையன் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய இன்னொருவர் என மூவரும் புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி கொலைமிரட்டல் விடுத்தார்கள். போலீஸில் புகார் கொடுப்பேன் என்றதற்கு, ‘போலீஸ் என்னை சுட்டுடுவானா? கலெக்டர் என்னை தூக்குல போட்டுடுவானா?’ என்று நக்கலாக பேசி சிரித்து மிரட்டினார்கள். இதனால், எனக்கும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு கேட்டு மறுநாளே திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர்,  நெல்லை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அனைத்து உயரதிகாரிகளுக்கும் ஆடியோ வீடியோ ஆதாரங்கள் உள்ளது என குறிப்பிட்டு புகார் கொடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை எனக்கு கொலைமிரட்டல் பள்ளி நிர்வாகி சாஹுல் அமீது மீது அவர்களது பெயரைச்சொல்லிக்கொண்டுவந்த அடியாட்கள் மீதும் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களை மிரட்டுவது மட்டுமில்லாமல் பள்ளியின் முதல்வர் பெல்சியா ரோஸியின் உத்தரவுப்படி எங்கள் பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் மட்டும் வந்து ஃபீஸ் கட்டாத பிள்ளைகளிடம் கொடுத்த புத்தகங்களை திரும்ப பிடுங்கியிடுக்கிறார்கள். இதனால், பிள்ளைகள் மன உளைச்சலாகி எப்போ ஃபீஸ் கட்டுவீங்க? இல்லைன்னா வேற ஸ்கூல் போயிடுறேன்’ என்று அழுகிறார்கள். அதனால், நீதிமன்றத்திலும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடுத்திருக்கிறேன்” என்கிறார் மன வேதனையோடு.

 

PRIVATE



பள்ளிநிர்வாகிகள் கொலைமிரட்டல் விடுத்ததாக முகமது யூனூஸ் புகார் கொடுத்து 10 நாட்களுக்குமேலாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் கண்ணணிடம் கேட்டபோது, “விரைவில் விசாரித்த நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார் உறுதியாக.  புகார் தெரிவித்ததை இப்போதைக்கு பள்ளிநிர்வாகியிடம் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டபிறகும் உடனே பள்ளிநிர்வாகியிடம் போட்டுக்கொடுத்தது ஏன்? என்று  டி.இ.ஓ. சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜிடம் நாம் கேட்டபோது, “உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான்… பள்ளிநிர்வாகியிடம் சொன்னேன்” என்று சமாளித்தார்.

 

மிரட்டிய தனியார்ப்பள்ளி அறங்காவலர் எஸ்.எம்.பி. சாஹுல் அமீதுவிடம் நாம் விளக்கம் கேட்டபோது, “மிரட்டும் நோக்கத்தில் பேசவில்லை. மேலும், அரசு நிர்ணயத்த கட்டணத்தைதான் வசூலிக்கிறோம். ஆனால், பயிற்சிப்புத்தகங்கள், பள்ளிவிதிமுறைகளுடன் கூடிய நாள்காட்டி, ஐ.டி கார்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கணினி பயிற்சி சான்றிதழ், ஆங்கில இலக்கணப்புத்தகம், ஹிந்தி மொழியை மேம்படுத்த பிராத்மிக் புத்தகப் பயிற்சி, வரைபட புத்தகங்கள், ஸ்கில் டெவலப்மெண்ட், ஸ்மார்ட் உள்ளிட்டவற்றிற்குத்தான் கட்டணம் வசூலிக்கிறோம்” என்றார் விளக்கமாக.

 

 

 

PRIVATE



இந்நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை தொடர்புகொண்டு நாம் பேசியபோது நம்மிடம் பேசிய இயக்குனர் பேராசிரியர் ராம்கணேஷ் நம்மிடம், “தொழில் முனைதல் மற்றும் சுயவேலை மேம்பாட்டு நிறுவனத்தின்மூலம் நாங்கள் செயல்படுத்திவரும் ‘சூட்ஸ்’ திட்டத்தை 436 தனியார் பள்ளிகளில் 5 முதல் 9 ஆம்வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் செயல்படுத்தி வருகிறோம். பதிவுக்கட்டணம், நோட்டுப்புத்தகங்கள், சான்றிதழ் அனைத்திற்கும் சேர்த்து வருடத்துக்கு ஒரு மாணவரிடமிருந்து 150 ரூபாயிலிருந்து 350 ரூபாய்வரைதான் கட்டணமாக பெறுகிறோம். ஆனால், எங்களைவைத்து யாராவது கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனே அந்தப்பயிற்சியை கொடுப்பதை நிறுத்திவிடுவோம்” என்றார் அதிரடியாக.

 

 

PRIVATE



இதுகுறித்து, பேற்றோர் தரப்பில் பேசிய முகமது யூனூஸ் நம்மிடம், “பள்ளிநேரம் முடிந்து 4 மணிக்குமேல் அவர்கள் என்ன ஸ்பெஷல் கோச்சிங் வேண்டுமானாலும் கொடுத்துவிட்டு அதற்கான கட்டணத்தை பெற்றோர்களிடம் வசூலித்துக்கொள்ளட்டும். ஆனால், இதுவரை இப்பள்ளியானது பள்ளிநேரம் போக வேறு எந்த கோச்சிங்கும் கொடுத்ததில்லை. அப்படியென்றால், கூடுதல் கட்டணத்தை எப்படி செலுத்தமுடியும்? இதனால், ஸ்பெஷல் க்ளாஸ், கோச்சிங், ஸ்விம்மிங், யோகா என்கிற பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தனி தனியாக எவ்வளவு என்பதை பெற்றோருக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் தனியாக பொதுநல வழக்கு தொடுக்க இருக்கிறேன். எங்கள் பிள்ளைகள் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள எந்த பிள்ளைகளும் பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் எங்கள் பிள்ளைகள் பட்ட துன்பங்களையும் அவமானங்களையும் படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பொதுநல வழக்கு தொடுக்க இருக்கிறேன்” என்கிறார் பொதுநலத்தோடு.

 


 

கல்வி அதிகாரிகள், காவல்துறை, நீதிமன்றம் தலையிட்டு முறையான நடவடிக்கை எடுத்தால்தான் தமிழகம் முழுக்க நூதனமுறையில் பெற்றோர்களிடம் கட்டணக்கொள்ளை அடிக்கப்படுவதை தடுக்கமுடியும்.   

 

 

 

      

சார்ந்த செய்திகள்