கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப் பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடி வந்தது போலீஸ். இதன்படி, காரமடை காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர் செந்தில் குமார், தலைமை காவலர்கள் மகேந்திரன், ஜெயபாலகிருஷ்ணன், சரவணகுமார், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை டீம் குற்றவாளிகளை வலை வீசி தேடிவந்தனர்.
அப்போது காரமடை மற்றும் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த கிருஷ்ணராஜ் (37), ஷிகாபுதீன் (32) ஆகிய இருவரை தனிப்படையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். தொடர் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.