தர்மபுரியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற பெண் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி அருகே உள்ள பழைய தர்மபுரியைச் சேர்ந்தவர் பழனி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சத்யா (42). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். உடல்நலம் சரியில்லாததால் பழனி சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் சத்யா வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரிடம் தனக்கு வேலை இருந்தால் தகவல் சொல்லும்படி கூறியுள்ளார்.
இந்நிலையில், பிப்ரவரி 25ம் தேதி, அந்தப் பெண் சத்யாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், தனக்குத் தெரிந்த இடத்தில் வேலை காலியிடம் இருப்பதாகவும், விருப்பம் இருந்தால் தர்மபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிலையத்திற்கு வருமாறும் அழைத்துள்ளார். அதை நம்பிய சத்யா அவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றார். அங்கு சென்றபோது மேலும் மூன்று இளம்பெண்கள் வேலை கேட்டு அந்தப் பெண்ணை அணுகியதாகவும், அவர் அழைத்ததன் பேரில் அங்கே வந்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த அந்தப் பெண், நான்கு பேரையும் அழைத்துக் கொண்டு வெண்ணாம்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு 4 பேருக்கும் முன்பணமாக 1000 ரூபாய் கொடுத்துள்ளார். சத்யாவை ஒரு அறைக்குள் அடைத்து வைத்த அந்தப்பெண், அந்த அறைக்குள் ஆண் ஒருவரை அனுப்பியுள்ளார். அந்த நபர் சத்யாவிடம் பாலியல் ரீதியாக நடக்க முயன்றபோதுதான் தன்னையும், பிற மூன்று பெண்களையும் அந்தப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த ஏமாற்றி அழைத்து வந்திருப்பதை சத்யா உணர்ந்து கொண்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நான்கு பெண்களும் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடி, தர்மபுரி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், நான்கு பெண்களையும் பாலியலில் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ரங்கநாதன் மனைவி பாக்கியம் (48) என்பதும், அவருக்கு தர்மபுரி மேல்தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரபு (31) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.