சிதம்பரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கார் கண்ணாடியை நூதன முறையில் உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பல ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இதில் பலர் கார் மூலம் வருகிறார்கள். காரில் வருபவர்கள் கீழ வீதியில் அவர்களது காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்வது வழக்கம். இப்படி செல்லும் இவர்களின் கார்களை கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் கண்காணித்து நூதன முறையில் கார் கண்ணாடிகளை உடைத்து காரில் உள்ள பணம் மற்றும் நகை, லேப்டாப் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை தொடர்ந்து திருடி வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் இதுகுறித்து சிலர் சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் பலர் புகார் கொடுக்காமல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் அழுது புலம்பி விட்டு சென்றும் உள்ளனர்.
மேலும் அதே கீழ வீதியில் நிறுத்தப்படும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்களும் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து பலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர் திருட்டு நடைபெறுவதை காவல் துறையினர் சீருடை அணியாமல் கண்காணித்து வந்த நிலையிலும், இதுபோன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்தது இதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் செவ்வாய் கிழமை இரவு சென்னையை சேர்ந்த சச்சிதானந்தம் என்பவர் குடும்ப திருமணத்திற்காக செய்த தாலி மற்றும் தாலி சரடுகளை சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைத்து பூஜை செய்து எடுத்து செல்வதற்கு கோவிலுக்கு வந்துள்ளனர். மேலும் கோவிலுக்கு கொடுப்பதற்காக வைத்துள்ள ரூபா 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணத்துடன் சிதம்பரத்திற்கு காரில் வந்துள்ளார். பின்னர் காரை கீழ வீதியில் நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது இதனை நோட்டமிட்ட திருட்டு மர்ம நபர்கள் அவரது கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த பணப்பெட்டி மற்றும் யையும் எடுத்துச் சென்று நைசாக நழுவியுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டு மடக்கி பிடித்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்ற ஒருவரை பிடித்தனர் இதில் 3 பேரில் 2 பேர் பிடிபட்டனர். இவர்களை கவனிப்புடன் சிதம்பரம் காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் திருடர்கள் குறித்து காவல்துறையினர் எந்த தகவலும் வெளிப்படுத்தவில்லை.
இந்த சம்பவத்தை அறிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இனிமேலாவது இதுபோன்ற திருட்டு நடைபெறாமல் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.