சென்னை மற்றும் கோவையில் ஜி ஸ்கொயர், லோட்டஸ் குழுமம், சரவணா ஸ்டோர்ஸ், பெரம்பூர் ரேவதி ஸ்டோர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய 74 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.433 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், கணக்கில் வராத பணம் ரூ. 25 கோடி, 12 கிலோ தங்கம், 626 கேரட் வைரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அத்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற இடங்களில் எப்படியோ? தி.நகர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது இப்படித்தானாம் -
இச்சோதனையின்போது, தி. நகர் - சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடைக்கு 30-க்கும் மேற்பட்ட கார்களில் சென்ற வருமான வரித்துறையினர், தங்களை திருமண கோஷ்டி என்று அறிமுகம் செய்துகொண்டு, பட்டுப் புடவை செக்சன் எங்கே இருக்கிறது என்று கேட்டு, முதல் தளத்தில் பர்ச்சேஸை ஆரம்பித்துள்ளனர். மற்ற அதிகாரிகளெல்லாம் இதர தளங்களில் ‘அசெம்பிள்’ ஆன பிறகு தான், உண்மை விவரத்தைக் கூறி, அங்கிருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு, சோதனையைத் தொடர்ந்துள்ளனர். சோதனை நடந்த 6 நாட்களிலும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடும் சோதனைக்குப் பிறகே தங்களின் விடுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகமே உணவு உள்ளிட்ட இதர வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது. அதிகாரிகளின் உணவுத் தேவைக்காகப் பயன்படுத்தியதால், அந்த ஸ்டோரில் இருந்த காய்,கறிகள் எதுவும் அழுகி வேஸ்ட் ஆகவில்லையாம்.
‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே’ என்பது பழமொழி. திருமண மண்டபத்தில் பரிமாறுவதுபோல், என்னதான் வகைவகையாக உணவளித்து விழுந்து விழுந்து கவனித்தாலும், கிடுக்கிப்பிடி விசாரணையின்போது தளராமல், சோதனை முடியும் வரையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இறுக்கமாகவே நடந்துகொண்டார்களாம்.
‘அன்பை அள்ளித் தாராயோ ப்ரியமானவனே!’ என்று விளம்பரப் பெண்களால் சிலாகிக்கப்படும் பாட்டுடைத் தலைவனை, ஆறு நாள் சோதனையும் பாடாய்ப்படுத்தி விட்டதாம்!