சுர்ஜித் வருவானா என்று டிவி நேரலையை பரபரப்பாக பார்த்துக்கொண்டிருந்த பெற்றோருக்கு, தனது இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியானது தாமதமாக தெரிய வந்து கடும் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Water -](http://image.nakkheeran.in/cdn/farfuture/MAsqB389vf2Zy3U-fEP_ZTwiVQXZthM1XWlCvLGY23I/1572325980/sites/default/files/inline-images/454_1.jpg)
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி இரண்டு வயது குழந்தை சுர்ஜித் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கினான். சுர்ஜித்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தது. நடுக்காட்டுப்பட்டியில் நடக்கும் முயற்சிகள் தொடர்பாக தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட்டது.
இந்த நேரலையை தமிழகமே பார்த்துக்கொண்டிருந்தது. தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் - நிஷா தம்பதியினர். இவர்கள் இருவரும் திங்கள்கிழமை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்தை மீட்கும் பணி பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களது இரண்டு வயது மகள் ரேவதி சஞ்சனா அவர்களுடன் இருந்திருக்கிறாள்.
சற்று நேரத்தில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, திடீரென காணவில்லை. சத்தம் வரவில்லை என நிஷா தேடியுள்ளார். லிங்கேஸ்வரனும் தேடியுள்ளனர்.
அப்போது குளியல் அறையில் உள்ள தண்ணீர் டிரம்மில் குழந்தை தவறி விழுந்திருந்தது தெரிய வந்தது. பின்னர் இருவரும் பதறிப்போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அங்கு குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.