Skip to main content

வெற்றிகரமான தோல்வி தமிழிசைக்கு!

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 

கல்யாணத்திற்கு போன இடத்தில் திடீர் மாப்பிள்ளை ஆன கதை மாதிரி, தமிழிசைக்கு தூத்துக்குடியில் நாடாளுமன்ற சீட் கிடைத்தது. ஸ்டெர்லைட் பிரச்சனையால் தூத்துக்குடியை யார் பக்கமாவது தள்ளிவிடலாம் என்ற அதிமுக கணக்குப் போட்டு வைத்திருந்தது. 

 

இந்த நேரத்தில் பியூஸ் கோயல் சென்னை வந்து அதிமுக கட்சித் தலைவர்களிடம் கூட்டணி பேச்சு பேசினார். பல சுற்றுப் பேச்சு நடத்தி ஒரு வழியாக 5 சீட்டை பிஜேபிக்கு ஒதுக்க முன் வந்தது அதிமுக.  இதனால், பிஜேபியில் இருக்கிற 5 தலைவர்களுக்கு சீட் உறுதி என்பது அப்போதே பரவலாக பேசப்பட்டது.

 

t

 

அப்படி 5 தொகுதிகளை ஒதுக்கும்போது, பிஜேபிக்கு செல்வாக்கே இல்லாத தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 தொகுதிகளை அதிமுக தந்திரமாக தள்ளிவிட்டது. வேறு வழியில்லாமல் தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்திர ராஜன், தூத்துக்குடி கடலில் தாமரை மலர்ந்தே தீரும் என்று வீர வசனம் பேசினார். விளாத்திகுளத்தில் ஓட்டுக் கேட்கும்போது வெங்காயத்தால் செய்யப்பட்ட தாமரை பூ வரவேற்பை கண்டு புளகாங்கிதம் அடைந்தார். 

 

அதிமுக கூட்டணியில் பிஜேபி சேர்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் அதிமுகவை கழுவி கழுவி ஊத்திய தமிழிசை, கூட்டணி சேர்ந்த உடன் அண்ணன் எடப்பாடியார் நல்லாட்சி செய்கிறார் என்று மாற்றி பேசினார். இபிஎஸ்சும், பிரச்சாரத்தின்போது தமிழிசையை வல்லவர், நல்லவர் என வானளாவ புகழ்ந்தார். ஆனால், தூத்துக்குடி மக்கள் உப்பு விளைவிக்கிறவர்கள். அந்த ரோசமும், உணர்வும் உடம்பில் இருக்கும் என்பதை தேர்தல் முடிவின் மூலம் காட்டி விட்டனர். 

 

எப்படி எச்.ராஜா சர்ச்சையில் பேசி முகம் சுழிக்க வைப்பாரோ? அதற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழிசை பேசுவார். சென்னையில் இருந்து அதிகாலை கோவை கிளம்புவார். சென்னை விமான நிலையத்தில் அப்போது ஒரு பேட்டி அளிப்பார். அப்புறம் கோவை விமான நிலையத்தில் இறங்கும்போது ஒரு பேட்டி. (விமானத்தில் பறந்த அந்த ஒரு மணிநேரத்தில் அப்படி என்ன தலைகீழ் மாற்றம் வந்திருக்கப்போகிறது?) கோவையில் கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனைக்கு பிறகு ஒரு பிரஸ் மீட். பிறகு சென்னை கிளம்பும்போது கோவை விமான நிலையத்தில் ஒரு பிரஸ்மீட், அப்புறம் சென்னை வந்திறங்கிய பிறகு ஒரு பிரஸ்மீட். 

 

இதே நிலை தான் டெல்லி, தூத்துக்குடி போன்ற பயணங்களின் போதும் நடக்கும். கோவாவில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் இறந்து போனார். அதற்கு துக்கம் விசாரிக்க செல்லும் போதும் பிரஸ்மீட் அவசியம் தானா?. பத்திரிக்கையாளர்கள் விமான நிலையத்திற்கும் போகவில்லை என்றாலும் காத்திருந்து எதையாவது சொல்லிவிட்டு போவது தான் தமிழிசையின் ஸ்டைல். அது தான் அவருக்கு எதிர்வினை. 

 

இப்போது கூட, "எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று பார்லிமென்டில் போய் வெளிநடப்பு செய்யப்போகிறார்கள் என்று சொல்கிறார். இது எதிர்கட்சிகளை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் தம்மை தாமே தரம் தாழ்த்திக் கொள்கின்ற செயல்". என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

 

தோல்வி என்பது தமிழிசைக்கு புதிதல்ல. அவர் 5 வது முறையாக தோல்வி கண்ட தேர்தல் இது. முதல் முறையாக 2006-ம் ஆண்டு ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் பிஜேபி வேட்பாளராக களம் இறங்கினார். அந்த தேர்தலில் அவர் 5,343 வாக்குகள் பெற்று 5-வது இடத்தை பிடித்தார். திமுகவை சேர்ந்த அப்பாவு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

 

2009-ல் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அப்போது அவர் பெற்ற வாக்குகள் 23,350

 

2011-ல் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை, 7,048 வாக்குகள் பெற்று 4-வது இடம் பிடித்தார். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக் வெற்றி பெற்றார்.

 

2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட தமிழிசை 19,167 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இப்போது தூத்துக்குடியில் அவர் பெற்ற வாக்குகள் 2,14,497, ஆனால் அவரை விட கனிமொழி 3 லட்சத்து 45, 848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கனிமொழியின் மொத்த வாக்குகள் 5,60,345.

 

முந்தைய தேர்தலில் தமிழிசை தோல்வி அடையும் போது,  "எனக்கு வெற்றிகரமான தோல்வி, எதிர்க்கட்சிகள் தாற்காலிகமாக (தற்காலிகமாக என்பதே சரியானது) வெற்றி பெற்றதாக" கூறி சமாளிப்பார். இந்த வெற்று பேச்சு, சமாளிப்பு எல்லாம் தான் தமிழகத்தில் தாமரையை மலரவிடாமல் செய்துவிட்டது என்பதை தமிழிசை உணர்ந்தால் சரி.

சார்ந்த செய்திகள்