தூத்துக்குடி மாவட்டம், ஏரலையடுத்த கொற்கைப் பகுதியை ஒட்டிய அகரம் கிராமப் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் அதே ஊரைச் சேர்ந்த ஈசாக் மகன் பொன்சீலன். அதிமுக பிரமுகரான இவர், கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்துத் தலைவராக வெற்றிபெற்றிருக்கிறார். தூத்துக்குடி துறைமுகத்தில் இவரது லாரி காண்ட்ராக்ட் அடிப்படையில் இயங்கிவருவதால், தொழில் நிமித்தமாக பொன்சீலன், தன் மனைவி எஸ்தர் மெர்லின் மற்றும் குழந்தைகளோடு முத்தையாபுரத்தில் வசித்துவந்தார்.
தனது கிராமமான அகரத்தில் நேற்று முன்தினம் (18.08.2021) கோவில் கொடை நடந்ததால் நேற்று மதியம் இரண்டாம் நாள் பூஜையில் கலந்துகொண்ட பொன்சீலன், பஞ்சாயத்துத் துணைத் தலைவரான தவசிக்கனி என்பவரின் வீட்டில் மதிய விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அது சமயம் அந்தப் பகுதிக்கு காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், வீட்டை நோக்கி வருவதைக் கண்டு பதற்றமான பொன்சீலன், தவசிக்கனியிடம் கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போடும்படிச் சொல்ல, உடனே வீடு பூட்டப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அந்தக் கும்பல், வீட்டின் மேலே ஏறி ஓடு கம்புகளை உடைத்து, கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீட்டிற்குள் குதித்தவர்கள், பொன்சீலனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். ரத்தச் சகதியில் துடிதுடித்த பொன்சீலன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்தப் பயங்கர சம்பவத்தைக் கண்டு அங்குள்ளவர்கள் பதறியடித்து ஓடினர். தொடர்ந்து அந்தக் கும்பல் கதவை உடைத்துக் கொண்டு தயாராக நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறிப் பறந்திருக்கிறார்கள். தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேசன், ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, எஸ்.ஐ. ஜேம்ஸ் வில்லியம் உள்ளிட்ட போலீசார், பொன்சீலனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, ஸ்பாட்டிலேயே விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.
போலீசாரின் விசாரணையில் கூறப்படுவது என்னவெனில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அகரத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் பொன்சீலனும் அவரது நண்பர் லெனினும் வேலை பார்த்தனர். மோகன், தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள கழிவுப் பொருட்களைக் காண்ட்ராக்ட் அடிப்படையில் எடுத்து வெளியே விற்பவர். இந்தத் தொழிலில்தான் மோகனுக்கும் பொன்சீலனுக்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக 2008இல் பொன்சீலனும் லெனினும் சேர்ந்து மோகனை வெட்டிக் கொன்றதாகத் தெரியவந்திருக்கிறது.
அதையடுத்து பொன்சீலனும் லெனினும் சேர்ந்து இதே கழிவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே சமயம் மோகன் படுகொலை வழக்கில் சாட்சிகள் இல்லாததால் பொன்சீலனும் லெனினும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சூழலில் துறைமுகக் கழிவு பொருள் விற்பனை தொடர்பாக பொன்சீலனுக்கும் லெனினுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து 2017இல் அகரம் அருகேயுள்ள வாழைத் தோட்டத்தில் வைத்து லெனினைக் கூலிப்படை கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றது. இந்த வழக்கில் பொன்சீலன் ஏ1 குற்றவாளியானார். இந்த வழக்கு ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தற்போது நடந்துவருகிறது. லெனினின் கொலைக்குப் பழிக்குப் பழியாக, அவரது உடன் பிறந்தவர்களின் தூண்டுதலின் பேரில் பொன்சீலன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணைப் போய்க்கொண்டிருக்கிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் அகரம் பெருமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட பொன்சீலன் வெற்றிபெற்றிருக்கிறார். இதில் ஏதும் விரோதம் உள்ளதா என்றும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரிடம் பேசியபோது, “இந்தப் பகை 2017லிருந்தே தொடர்ந்துவருகிறது. பொன்சீலன் தனக்கு வேண்டப்படாதவர்களை மிரட்டியும் வந்திருக்கிறார். லெனின் சகோதரர்கள் வேலை செய்கிற இடத்திற்குச் சென்று அவர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் மிரட்டியும் வந்திருக்கிறார். இதனால் லெனினின் சகோதரர் தரப்பைச் சேர்ந்தவர்கள் ஆத்திரமாகியிருக்கிறார்கள். மேலும், லெனின் தரப்பினரோடு தொடர்பில் உள்ளவர்களையும் பொன்சீலன் மிரட்ட, அதிலும் பகைமையாகியிருக்கிறது. இந்தநிலையில்தான் இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருக்கிறது. கொலை தொடர்பாக 4 பேரைப் பிடித்து விசாரணை செய்துவருகிறோம். விரைவில் மொத்த பேரையும் வளைத்துவிடுவோம்” என்றார் எஸ்.பி. ஜெயக்குமார்.
பழிக்குப் பழியாக நடந்த இந்தப் படுகொலைச் சம்பவத்தால் பரபரப்பிலிருக்கிறது தூத்துக்குடி மாவட்டம்.