தூத்துக்குடி மாவட்டத்தின் தட்டார்மடம் அருகில் உள்ள தாமரைமொழியை சேர்ந்தவர் முத்துவேல் (38). தட்டார்மடத்தில் டி.வி. மெக்கானிக் கடை வைத்திருப்பதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியார் டி.வி. நிருபராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது டி.வி. கடையில் டி.வி. ஒன்றைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது கடையில் நுழைந்த அந்த ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர், முத்துவேலை அரிவாளால் வெட்டியதாகத் தெரிகிறது. இதில் அவருக்கு தலை, கழுத்து இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குப் பின்பு மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்து வட்டிப் பிரச்சினை குறித்து செய்தி வெளியிட்டதால் முத்துவேல் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும், பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படும் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கையும் எடுக்க வலியுறுத்தியும், நெல்லை மற்றும் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள், நிருபர்கள், சம்பவத்தைக் கண்டித்து டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் மனு அளித்தனர்.