‘ஓபன்’ஆகப் பேசுவதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை யாரும் அடித்துக்கொள்ள முடியாது. அந்த அளவுக்கு, எந்தக் கேள்விக்கும் தயக்கமே இல்லாமல் பதிலளித்து விடுவார். நேற்றிரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்திருந்த அவரிடம், உள்ளாட்சி தேர்தலின்போது பதவிகள் ஏலம் போவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,‘இதெல்லாம் ஒரு விஷயமா?’என்கிற ரீதியில் பட்டென்று பதிலளித்தார்.
அமைச்சரின் ‘வாய்ஸ்’ இதோ- “பதவி ஏலம்கிறது காலம் காலமா நடக்கிறதுதான். ஏலம்னு விடமாட்டாங்க. யாராவது ஊருக்குள்ள கொஞ்சம் ரூபாயைக் கொடுத்து நான் நிற்கிறேன்னு பேசுவாங்க. கோவிலுக்கு ரூபாய் கொடுத்துடறேன். கோவிலைக் கட்டி கொடுத்துடறேன். கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்ணிக் கொடுத்துடறேன். இந்த மாதிரி பேசுவாங்க. இதை இப்ப இருக்கிற மீடியாக்கள் பெரிய லெவலில் கொண்டு போயிடறாங்க. ஆனா.. இது காலம் காலமா நடந்துக்கிட்டுதான் இருக்கு. கலைஞர் ஆட்சியில, புரட்சித் தலைவர் ஆட்சியில, அம்மா ஆட்சியில, அதிமுக ஆட்சியில, எடப்பாடியார் ஆட்சியில.. இப்படி யார் ஆட்சியில இருந்தாலும், ஊர்ல பேசி முடிவு பண்ணி, இவருதான் நிற்கணும்பா.. வேற யாரும் நிற்காதீங்கப்பா.. இந்த தடவை இவரு இருக்கட்டும்பா.. அடுத்த தடவை அவரு இருக்கட்டும்பா.. அப்படி பேசி முடிச்சிருவாங்க. கிராமங்களில் இப்பவும் இது வழக்கத்துல இருக்கு. இந்த மாதிரி முடிவு பண்ணுற விஷயம் அரசாங்கத்தோட கவனத்துக்கு வந்துச்சுன்னா, அரசு உடனே நடவடிக்கை எடுத்திரும்.”என்று உள்ளது உள்ளபடி, சில கிராமங்கள் கடைப்பிடித்து வரும் வழக்கத்தை, வெளிப்படையாகப் பேசினார்.