வெளிநாடுகளிலிருந்து சமையலுக்குப் பயன்படுகிற மஞ்சள், லாகிரி வஸ்துகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இதனால் அங்கு இந்தியாவில் விளைகிற உணவுப் பொருள், மருத்துவ குணம் கொண்ட மஞ்சள் ஆகியவற்றுக்கு கடும் கிறாக்கி. இந்தியக் கரன்சியிலிருந்து இரண்டு மடங்கிற்கும் மேலான விலை கடத்தலில் கிடைக்கின்றன.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட தென்னிந்திய பகுதியைச் சேர்ந்த மாஃபியாக்கள், தூத்துக்குடி வழியாக மேற்கண்ட பொருட்களை வல்லங்கள் மூலம் இலங்கைக்குக் கடத்திவருகின்றனர். ஆனாலும் முடிந்தவரை கடலோரக் காவல்படையினர் இவர்களை வேட்டையாடி வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் (20.05.2021) தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டரான விஜய அனிதாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், எஸ்.ஐ. ஜீவமணி உட்பட தனது டீமுடன் தூத்துக்குடி கடற்பகுதியில் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்.
அச்சமயம் அந்தப் பக்கமாக நின்றுகொண்டிருந்த லோடு ஆட்டோ ஒன்றிலிருந்து சிலர் படகுக்கு மூட்டைகளை மாற்றிக்கொண்டிருந்தனர். இவர்களைக் கண்டதும் அவர்கள் தப்பியோட, விஜய அனிதா டீம் அதனை சோதனையிட்டபோது 30 கிலோ எடை கொண்ட 28 மூட்டைகளில் 840 கிலோ மஞ்சள், 14 மூட்டைகளில் 420 கிலோ பீடி இலைகள் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைக் கைப்பற்றியுள்ளனர். அதோடு லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். அதன் பின் இந்த மூட்டைகளைக் கொண்டுவந்த லோடு ஆட்டோ ட்ரைவரான மேட்டுப்பட்டி உமர் அலி என்பவரைக் கைது செய்தனர்.
பிடிபட்டவையின் மதிப்பு இந்திய மதிப்பில் 20 லட்சத்திற்கும் மேலானது. இலங்கையில் தடை காரணமாக அங்கு விலை அதிகம் கிடைப்பதால் கடத்தல்காரர்கள் மஞ்சள், பீடி இலைகளைக் கடத்துகின்றனர். மேலும், கடத்தல் தொடர்பாக முகம்மது அசாரூதீன் என்பவரைத் தேடிவருவதாக க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட தரமான பீடி இலைகள், ஒடிஸா, சட்டீஸ்கர் மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.