டிடிவி அணிக்கு தாவியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உட்பட 22 எம்எல்ஏக்களின் தொகுதி மக்களை இந்த எடப்பாடி அரசு புறக்கணித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் வரும் நவம்பர் 10ம்தேதி முதல் தொகுதி வாரியாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என டிடிவி அறிவித்திருந்தார்.
அதன்படி 10ம் தேதி ஆண்டிபட்டியை தொடர்ந்து 11ம்தேதி நிலைக்கோட்டையில் டிடிவி தலைமையில் உண்ணாவிரதம் நடக்க போவதாக அறிவித்து இருக்கிறார். ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கத்துரை கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பதால் நிலக்கோட்டை தொகுதியும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் வருகிறது. இருந்தாலும் இந்த நிலக்கோட்டை அதன் சுற்றியுள்ள பகுதிகளில் திண்டுக்கல் மாநகர செயலாளர் ராமுத்தேவரின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் இருந்து வருகிறார்கள்.
இரண்டு மாதத்திற்கு முன்பு ராமுத்தேவர் ஆதரவாளர்களுக்கும், தங்கதுரை ஆதவாளர்களுக்கும் இடையே திண்டுக்கல்லில் நடந்த டிடிவியின் ஒட்டன்சத்திரம் பொதுக்கூட்டத்திற்கான ஆலோசனை
கூட்டத்தில் மோதிக்கொண்டு சேர்களை எடுத்து வீசி கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
அந்த அளவுக்கு உட்கட்சி கோஷ்டி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில்தான் நிலக்கோட்டையில் டிடிவி தலைமையில் உண்ணாவிரதம் என்று அறிவித்தவுடனே தங்கத்துரை பதறி போய் இங்கு டிடிவி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தால் ராமுத்தேவர் ஆதரவாளர்கள் முழுமையாக ஆதரவு தரமாட்டார்கள், இதனால் தனக்கு கெட்டபெயர் ஏற்படும் என நினைத்து தங்கதுரை உடனே வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் கோவிந்தனை தொடர்புகொண்டு உண்ணாவிரதத்தை வத்தலக்குண்டில் நடத்தி கொள்ளலாம் என டிடிவியிடம் அனுமதி கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ஒன்றியமோ ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிடிவி இந்த பக்கம் வந்தபோது செலவு செய்த பணத்தவே ஈடுகட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன் அப்படி இருக்கும்போது இங்கு உண்ணாவிரதம் நடத்தும் அளவிற்கு என்னிடம் செலவு செய்ய பணம் பலம் இல்லை அதனால் நான் டிடிவியிடம் பேச முடியாது என ஒன்றியமும் ஒதுங்கி விட்டார்.
இதனால் டென்ஷனான கிழக்கு மாவட்டச் செயலாளர் தங்கதுரை எப்படி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போகிறோமா? என்ற பீதியில் இருந்து வருகிறார். டிடிவி நடத்தப்போகும் இரண்டாவது உண்ணாவிரதப் போராட்டம், உட்கட்சி கோஷ்டி பூசலால் நிலக்கோட்டையில் நடக்குமோ?நடக்காதோ?
என்ற பேச்சு இப்பவே கட்சிகாரர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.