முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்கள் மீது அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வந்தவுடன் அன்று மாலையே எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் திரும்பி கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதற்கு அடுத்த நாள் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயக்குமாரிடம், ‘கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால்... மீண்டும் கட்சியில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் சூழலில் ஓபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், ‘ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய மூன்று பேரையும் தவிர மீதம் யார் வேண்டுமானாலும் மன்னிப்பு கடிதம் கொடுத்து கட்சியில் இணைந்து கொள்ளலாம்’ என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், கோடநாடு வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை அரசு பெற்றுத் தர வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஓ.பி.எஸ் வெறும் வாய்ஸ் மட்டும் தான். ஆனால் மாஸ்டர் முதல்வர் ஸ்டாலின் தான். அவரது குரலாகத்தான் ஓ. பன்னீர்செல்வம் பிரதிபலிக்கிறார். கோடநாட்டில் குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியது அதிமுக அரசு. அத்தோடு இல்லாமல் வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தியதும் நாங்கள்தான். ஆனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை ஜாமீனில் எடுத்தவர்கள் திமுகவின் வழக்கறிஞர்கள். அதுமட்டுமல்லாமல் ஜாமீன் தாரர்களோடு புகைப்படம் எடுத்தது முதல்வர் ஸ்டாலின். நிலைமை அப்படி இருக்க ஓ.பி.எஸ் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்கிறார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலேயே கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பேசினார். அதுமட்டுமில்லாமல் நாங்கள் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கிறோம். மடியில் கணமில்லை அதனால் தான் நாங்களே சி.பி.ஐ விசாரணை கேட்கிறோம். ஆனால் ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுக்கிறீர்கள். அதிமுக அலுவலகம் நொறுக்கப்பட்டது உள்ளிட்ட பலவேறு விஷயங்களை திமுகவின் தூண்டுதலின் பெயரில் தான் ஓ.பி.எஸ் செய்கிறார்” என்றார்.
தற்போது ஜெயக்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “மன்னிப்பு கடிதம் கொடுத்து கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்று ஜெயக்குமார் கூறி எங்கள் மூன்று பேருக்கும் அதில் விதிவிலக்கு என்று சொல்லியிருக்கிறார். அதில் இருந்து என்ன தெரிகிறது. நாங்கள் மூன்று பேரும் மன்னிப்பு கேட்பவர்கள் அல்ல; எங்களுக்கு துரோகம் செய்துவிட்டதால் அவர்கள் தான் எங்க மூன்று பேரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை ஜெயக்குமாரே சொல்லிவிட்டார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஜெயக்குமார் கோடநாடு வழக்கில் எங்களுக்கு பயமில்லை; திமுகவின் தூண்டுதலின் பேரில்தான் ஓபிஎஸ் பேசி வருகிறார் என்று கூறுகிறார். பயமுள்ளவர்கள்தான் ஓபிஎஸ் குறித்து பேசுகின்றனர். மனசாட்சி படி, கோடநாடு சம்பவம் நடந்தபோது அவர்களுடனே இருந்தவர் ஓபிஎஸ். அதுமட்டுமில்லாமல் அதே நேரத்தில் எடப்பாடி அமைச்சரவையில் துணை முதல்வராகவும் இருந்தார். நிறைய உண்மைகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நிறைய தடையங்கள் அழிக்கப்பட்டதாகத் தகவல் கூட வந்தது. அந்த நேரத்தில் தற்போது ஆளும் அரசாங்கம் இதுபோன்று கோடநாடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி ஓபிஎஸ் ஆர்ப்பாட்டமோ அல்லது போராட்டமோ நடத்துவது தவறில்லை என்றுதான் நினைக்கிறேன்” என்றார்.