Skip to main content

“இ.பி.எஸ்-ன் ஊழல் ஆட்சியினால் மக்கள் திமுகவுக்கு ஆட்சியை கொடுத்தார்கள் - டிடிவி 

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
TTV Dhinakaran accuses Edappadi Palaniswami
                                                         கோப்புப்படம்

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட (அமமுக) அம்மா மக்கள் முன்னேற கழக பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தொண்டர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, டிடிவி.தினகரன் மேடையில் பேசுகையில், “அதிமுக கட்சியை துரோகிகளிடம் இருந்து மீட்க வேண்டும், ஆட்சி அதிகாரம் இருந்ததால் ஏமாற்றி வந்தார்கள். இன்றைக்கு அது இல்லை. காலம் நெருங்கி விட்டது. இந்த பாராளுமன்ற தேர்தல் அந்த துரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக அமையும். தமிழ்நாட்டு மக்களோடு சேர்ந்து அந்த துரோகிகளுக்கு சாவு மணி அடிக்க வேண்டும். தேர்தல் பணியை இப்போதே துவங்க வேண்டும் எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்ற தேர்தல் வரலாம்” என பேசினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நானும் ஓபிஎஸ்-ம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே இணைந்து பணியாற்றுவோம் என முடிவெடுத்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு சில கட்சிகளுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதெல்லாம் நல்லபடியாக முடிந்த பிறகு கூட்டணி குறித்து சொல்வது தான் அரசியல் கட்சிக்கு அழகாக இருக்கும். கூட்டணி முடிவான பிறகு முறையாக உங்களுக்கு சொல்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ஜெயலலிதாவின் இயக்கத்தை கையகப்படுத்தி வைத்துள்ள அந்த சுயநலவாதிகள், மக்கள் மன்றத்திலே தோல் உரிக்கப்படுகின்ற காலம் வெகு விரைவில் வரும். தமிழ்நாட்டு மக்கள் துரோகத்திற்கு என்றைக்கும் ஆதரவாக இருக்க மாட்டார்கள். துரோகம் செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிக்கும் காலம் எதிர் காலத்தில் வரும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்ட கேள்விக்கு, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதனை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் கையில் தான் உள்ளது. அதைப்பற்றி நான் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காகவும், தீயவர்களிடமிருந்து ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அமமுக. இந்தக் கொள்கையில், லட்சியத்தில் இருந்து என்றைக்கும் நாங்கள் பின் வாங்க மாட்டோம். இரண்டு பொதுத் தேர்தல்களில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் இங்கு எனது இயக்கத்தினர் எவ்வளவு ஆர்வமாக வந்துள்ளார்கள் என பாருங்கள். இங்கு வந்த கூட்டம் காசுக்காக வந்த கூட்டம் அல்ல, கொள்கைக்காக என்னோடு வந்தவர்கள்.

எடப்பாடி பழனிசாமி ஆளும் கட்சியாக இருந்த போதே ஆளும் கட்சி பலனை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி உடன் சேர்ந்ததை தவறு என உணர்ந்துதான் ஓபிஎஸ் அவரிடம் இருந்து வெளியேறி ஜெயலலிதாவின் தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எங்களோடு இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றி திரும்பத் திரும்ப பேச வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் சசிகலா பிரச்சாரத்திற்கு வர வாய்ப்புள்ளதா என்று கேள்விக்கு, இதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்தார். “பாஜக வெளியிடுவதாக சொன்ன ஊழல் புகார் பட்டியலுக்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆளுகின்ற கட்சி மக்கள் விரோத ஆட்சியை செய்து வருகிறது, எடப்பாடி பழனிசாமியின் ஊழல் ஆட்சியினால் தான் மக்கள் இன்றைக்கு கோபப்பட்டு திமுகவிற்கு வாக்களித்தார்கள். விடியல் வரும் என நினைத்து ஆட்சியை கொடுத்தார்கள் ஆனால் இன்றைக்கு திமுக விடியாத ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை கூட அவர்கள் நிறைவேற்ற மனம் இல்லாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் மாற்று சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வரும் காலத்தில் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

“கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது” - இ.பி.எஸ்.!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
“Should not charge for summer training camp” - EPS

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டம் தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும். இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைபந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிற்கு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்துவோம், தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கு பெறுவதை ஊக்குவிப்போம் என்றும், அதற்காக மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் கூறும் திமுக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டியில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த அரசின் அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.