காதலித்து திருமணம் செய்துகொண்டு போலீசாரிடம் தஞ்சமடைந்த காதல் தம்பதியினரை பிரிக்கும் முயற்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முண்டியடித்து நிற்கும் சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
ராஜஸ்தானை சேர்ந்தவர் ரிக்கப்சந்த் மயிலாடுதுறை மாருதி நகரில் இருந்து வருகிறார். அவரது 19 வயது மகளும் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமுகத்தைச் சேர்ந்த இளைஞரான பாலச்சந்தர் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பாலசந்தருக்கு வயது 20. காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப, கடந்த 3ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதைக் கேள்விப்பட்ட பெண்ணின் தந்தை தன்னுடைய மகள் காணாமல் போய்விட்டார், அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதோடு தனது பணபலத்தைக் கொண்டு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்வோரிடம் பல லட்சம் கொடுத்து பெண்ணைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லியுள்ளார்.
தனது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதையும் அடியாட்களைக் கொண்டு தேடுவதையும் தெரிந்துகொண்ட அந்தப் பெண்ணும் பாலச்சந்திரனும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் விசாரணையில் அந்தப் பெண், “என்னை யாரும் கடத்திப் போகல. நான் விருப்பப்பட்டுதான் பாலச்சந்தரை திருமணம் செய்து கொண்டேன்” என தெரிவித்தார். ஆனாலும் சில உயர் போலிஸ் அதிகாரிகள் விடாப்பிடியாகப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வேறுவழியின்றி வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், அந்தப் பெண்ணையும் பாலச்சந்தரையும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம், "எங்க சமூகத்துல காதலித்து திருமணம் செய்துகொண்டால் உயிரோடு உடம்புல திரிநூலை சுற்றி நெய் ஊற்றி எரிச்சி சாம்பலாக்கிடுவாங்க" என கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார் அந்தப் பெண். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, “பெண் 18 வயது நிரம்பியவர் என்பதால் அவர் விருப்பப்பட்ட இடத்தில் வசிக்கலாம்" என உத்தரவிட்டார். பின்னர் அந்தப் பெண் பாலச்சந்தர் குடும்பத்தினருடன் பாதுகாப்பு தேடி வெளியூர் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், பாலச்சந்தர் குடும்பத்திற்கு நெருக்கமாக இருக்கும் மயிலாடுதுறை குறைநாடு சாலியார் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (34) என்பவரை அவரது வீட்டில் இருந்து ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று அடித்துத் துன்புறுத்தி, அந்தப் பெண்ணும் அந்தப் பையனும் எங்கே என கேட்டு மிரட்டியுள்ளனர். ராஜேஷை அடித்து விசாரிக்கும் ஆடியோ வைரலாகி பாலச்சந்தர் சார்ந்த சமூக இளைஞர் வட்டாரத்தில் பரபரப்பானது.
பின்னர் விடுவிக்கப்பட்ட ராஜேஷ் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "கடந்த ஏழாம் தேதி வீட்டில் இருந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் தன்னைக் கடத்திச் சென்று மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். அப்போது ஒரு சமூகத்தின் தலைவர் வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து காதல் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண்ணும் பாலச்சந்தரும் எங்கே இருக்கின்றனர் என்று கேட்டு என்னை அடித்துத் தாக்கிச் சித்ரவதை செய்தனர். எனது உயிருக்கு ஆபத்து இருக்கு" என தெரிவித்தார்.
விசாரணைக்குப் பிறகு நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் அவருக்கு ஆதரவான சிலரையும் தேடி வருகின்றனர். இது குறித்து விளக்கம் கேட்க வி.ஜி.கே.மணிகண்டனை தொடர்பு கொண்டோம். அவரது எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது. பெண் வீட்டினரோ, "பெண்ணுக்கு திருமண வயது ஆனாலும் பையன் இன்னும் மைனர்தான். அதன்படி இந்த திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைக்கிறோம்" என்கின்றனர்.