கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரத்திற்கு செல்லும் வழியில் உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இன்று திடீரென இரும்பால் செய்யப்பட்ட கடையை கிரேன் மூலம் கொண்டு வந்து வைத்துள்ளனர். பின்னர் அக்கடையில் மது பாட்டில்களை நிரப்பி கொண்டு இருந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பென்கள் புதிய மதுக்கடையை முற்றுகையிட்டு அப்பகுதியில் மதுக்கடை திறக்க கூடாதென அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் பள்ளிக்குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என தினந்தோறும் இவ்வழியாக செல்வோம் என்றும், மதுபிரியர்களால் தொல்லை ஏற்படுவது மட்டுமில்லாமல் தங்களின் குடும்ப நிம்மதி கேள்விக் குறியாகிவிடும் என்றும் மதுபானகடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, மதுபான கடை அகற்றப்படும் என்று உத்திரவாதம் அளித்த பின் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவியது.