விமான நிலைய ஊழியரைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கடற்கரையில் புதைக்கப்பட்ட சம்பவத்தில் மனைவியும் கோவில் பூசாரி ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தன். நங்கநல்லூரில் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த ஜெயந்தன், சென்னை விமான நிலையத்தில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனத்தின் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 18 ஆம் தேதி சொந்த ஊருக்குச் செல்வதாக சொல்லிவிட்டுச் சென்ற ஜெயந்தன் திரும்பி வராததால் அவரது சகோதரி சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் அவரது செல்போன் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பயன்படுத்திய செல்போன் சிக்னல் புதுக்கோட்டை மாவட்டம் செம்மாலம்பட்டி என்ற பகுதியைக் காட்டியது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் பாக்கியலட்சுமி என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தாம்பரத்தில் பாலியல் தொழில் செய்து வந்த பாக்கியலட்சுமிக்கு ஜெயந்தனோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், அடுத்த ஆண்டே பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு புதுக்கோட்டைக்கு வந்த பாக்கியலட்சுமி அங்கும் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். மார்ச் 18 ஆம் தேதி செம்மாலம்பட்டிக்கு சென்ற ஜெயந்தன், தன்னுடன் வாழ வேண்டும் என்று பாக்கியலட்சுமியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியலட்சுமி அவரைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸ் மற்றும் கட்டைப் பையில் வைத்து காரில் கோவளத்திற்கு கொண்டு வந்து பக்கிங்காம் கால்வாய் அருகே குழி தோண்டி புதைத்தது தெரிய வந்தது. பாக்கியலட்சுமிக்கு சங்கர் என்ற நபரும் அதே பகுதியைச் சேர்ந்த கோயில் பூசாரி வேல்முருகனும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கோயில் பூசாரி வேல்முருகன் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.