நெய்வேலி என்.எல்.சி இரண்டாம் அனல்மின் நிலையம் அருகே அம்மேரி ஊராட்சியிலுள்ள சாம்பல் ஏரியில் தினமும் ஏராளமான லாரிகளில் சாம்பல் பவுடர் ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலை பணிகள் மற்றும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அதிகமாக வாகனங்கள் செல்கின்றனர்.
நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து மந்தாரக்குப்பம் செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை வழியாக நெய்வேலி அனல் மின் நிலையம், என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் என்.எல்.சி ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தினமும் சென்று வருகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள், பள்ளி வாகனங்கள், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் மிதிவண்டிகள், இருசக்கர வாகனங்களில் இச்சாலை வழியாகச் செல்கின்றனர். அதேசமயம் நெய்வேலி சாம்பல் ஏரி செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாம்பல் ஏற்றிக்கொண்டு கனரக லாரிகளில் செல்லும்போது சாம்பல் பவுடர் பட்டு கண்களில் எரிச்சல் உண்டாகி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையில் என்.எல்.சி ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயணிக்கும் நிலையில் சாம்பல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் சாம்பல் பவுடர் காற்றில் பறந்து சாலை ஓரத்தில் படிந்து கிடப்பதாலும், மணல் மூட்டைகள் சாலை ஓரத்தில் வைத்திருப்பதாலும் சாலை சேரும் சகதியுமாகி வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. லோடு எண்ணிக்கையில் கூடுதலாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் லாரி ஓட்டுநர்கள் அதிக வேகத்தில் லாரியை ஓட்டுகின்றனர். மக்கள் அதிகம் நடமாடும் இடங்களிலும் லாரிகள் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது.
எனவே இச்சாலையை சீரமைப்பது மட்டுமின்றி சாம்பல்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களுக்குத் தனிப் பாதையை என்.எல்.சி நிறுவனம் அமைத்துக் கொடுக்க வேண்டும். குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான லாரிகள் தொடர்ந்து சாம்பல் பவுடர் அள்ளி செல்லும் போது வாகனங்களை முந்துதல், கிராஸ் செய்தல் போன்றவற்றாலும் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகின்றன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "காலை மற்றும் மாலை நேரங்களில் சாம்பல் லாரிகளை அனுமதிக்கக் கூடாது. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கூட்டமாகச் செல்லும்போது கூட லாரியை மெதுவாக ஓட்டுவதில்லை. லாரி டிரைவர்களிடம் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைக்கவில்லை. சாலையில் செல்லும்போது குறைவான வேகத்தில் செல்லாமல் அதிவேகத்திலேயே செல்வதால் தொடர்ந்து அச்சத்துடன் சாலையில் நடமாடி வருகிறோம். எனவே நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர், சாம்பல் பவுடர் ஏற்றிச் செல்லும் லாரிகளைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கின்றனர்.