காலாண்டு வரி உயர்வை எதிர்த்து தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் அனைத்து வகை வாகனங்களுக்கும் காலாண்டு வரியை உயர்த்தி அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வாகன உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக லாரி தொழில் நலிவடைந்து வரும் நிலையில், இந்தக் காலாண்டு வரி உயர்வு மேலும் தங்கள் தொழிலை நசுக்கும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், காலாண்டு வரி சுமார் 40% வரை உயர்த்தியதைக் கண்டித்து மாநில அளவிலான லாரி உரிமையாளர்கள் சங்கம் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தது. இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தென் மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள், வாடகை லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவளித்து இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இதனால் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் எல்பிஜி டேங்கர் லாரிகள் ஆகியவை இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.