கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தனர். அதையடுத்து விருத்தாசலம் நகராட்சி தலைவர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் நகரில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
அதனடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தினர் திருச்சியில் இருந்து ஆட்களை வரவழைத்து, நகரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த 30-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்துக் கொண்டு லாரி மூலம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது மணவாளநல்லூர் பகுதியிலுள்ள சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது அங்கு நின்று கொண்டிருந்த மர்மநபர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். தொடர்ச்சியாக கற்களை வீசியதால் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. லாரியை கற்களைக் கொண்டு வீசி அராஜகத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.
இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய பன்றிகளை ஏற்றி சென்ற லாரியை மர்ம நபர்கள் கற்களால் அடித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.