போதையில் பயணம்? கல்லூரி மாணவர் மரணம்!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் என்ற தனியார் கல்லூரி உள்ளது. இங்கு, திருப்பூர், என்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த செல்வகுமார் மகன் அஜய்மணீஷ் (வயது-20) மூன்றாமாண்டு கணிப்பொறியியல் படித்து வந்தார்.
இவர் கல்லூரி அருகே, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். இவர் கல்லூரிக்கும், வீட்டுக்கும் சென்றுவர மோட்டார் சைக்கிள் ஒன்றும் வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில் அஜய்மணீஷ், அவரது நண்பர் சந்தோஷ் ஆகியோர் ஹோண்டா யூனிகான் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலம் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் அவர்கள் வந்த போது சாலை வளைவில் வாகனத்தை திருப்பும் போது தடுமாறி கீழே விழுந்தனர்.
இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதால், முதலுதவி எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று தூங்கி விட்டனர். நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், அஜய்மணீஷுக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவருடைய நண்பர்கள் உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அன்கு அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக உயிரிழந்தார். இது குறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
சிவசுப்பிரமணியம்