திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே விடுதலைபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (60). இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். கல்லக்குடி அருகே உள்ள பெரிய குறுக்கை கிராமத்தில் உள்ள ராஜபாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான (39) பண்ணைத் தோட்டத்தில் முருகேசன் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வேலைக்கு சென்ற முருகேசனை தோட்ட உரிமையாளர் செந்தில் மற்றும் தனபால் ஆகிய இருவரும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அவரது மனைவி சகுந்தலாவிடம் கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் முருகேசனை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் சென்ற அரை மணிநேரத்தில் முருகேசன் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடலை பார்த்தபோது, பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. இது குறித்து கல்லக்குடி போலீஸ் ஸ்டேஷனில் சகுந்தலா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்திலை தேடி வந்தனர். சிறுகனூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்த செந்திலை கல்லக்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் செந்திலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசன் நான் சொல்லும் வேலைகளை ஒழுங்காக செய்யாததால் கோபத்தில் கட்டையால் அடித்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செந்தில் லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.