நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நேற்று (27.10.2024) நடைபெற்றது. இதனையொட்டி மாலை 4 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், ‘தளபதி, தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகப்படுத்தி வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் அவரை நோக்கி வீசிய அக்கட்சியின் துண்டை வாங்கி தோளில் அணிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை விஜய் ஏற்றினார். பின்னணியில் கட்சியின் பாடல் இசைக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி ததும்ப த.வெ.க கொடியை விஜய் ஏற்றி வைத்தார். இதனையடுத்து இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார்.
முன்னதாக இந்த மாநாட்டிற்காக காரில் பயணம் மேற்கொண்ட போது திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கலை மற்றும் அக்கட்சியின் நிர்வாகி கலை ஆகியோர் சாலை விபத்தில் நேற்று (27.10.2024) உயிரிழந்தனர். இந்த சம்பவம் த.வெ.க. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் அக்கட்சியின் தலைமை கழகம் சார்பில் இவ்விருவர்கள் உயிரிழப்புக்கு எவ்வித இரங்கலும் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது. இது தொடர்பாக அவரது உறவினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “உயிரிழந்த இருவரும் சிறிய வயதிலிருந்து விஜய் ரசிகர் மன்றத்திற்காக எவ்வளவோ உழைத்திருக்கிறார். எவ்வளவோ செலவு செய்திருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு முதல் மாநாட்டிற்காக இவர்கள் சென்றுள்ளார்கள்.
அப்போது விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவருக்கும் விஜய் ஒரு ஆறுதல் தெரிவித்திருக்கலாம். தலைமை கழகத்திலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு மற்றும் ஒரு குறுஞ்செய்தி ஏதும் வரவில்லை. அவருக்காக இவ்வளவு நாட்கள் உழைத்ததற்கு என்ன பலன்?. விஜய் அவர் தொண்டனுக்காகச் செயல்படவில்லை. உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி எல்லாம் கேட்கவில்லை. மாநாட்டில் ஒரு ஆறுதல் மட்டுமாவது தெரிவித்திருக்க வேண்டும்” என வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அஞ்சலி செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.