சென்னை புழல் சிறையில் எல்இடி டிவிக்கள், செல்போன்கள், கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அங்குள்ள கைதிகள் சிலர் அதிகாரிகள் பலரை சரிசெய்து பை ஸ்டார் ஓட்டல் போல சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. குறித்த படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சிறைகளில் சோதனை நடத்த திட்டமிட்டு கோவை, சேலம், கடலூர், பாளையங்கோட்டை சிறைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் கடந்த 20ம் தேதி சோதனை நடத்தினர். உதவி கமிஷனர் தலைமையில் 10 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவற்றில் விசாரணை கைதிகள் மட்டுமின்றி, தண்டனை கைதிகளும் உள்ளனர்.
அவர்களிடம் பீடி, சிகரெட், கஞ்சா, மதுபானங்கள் மற்றும் சொகுசு வாழ்க்கைக்குரிய பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்தப்பட்டது. கழிப்பறைகள், மருத்துவமனை, நூலகம் ஆகியவற்றிலும் இச்சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் சிக்கவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் சிறைக்கு வரும் நபர்களில் மனநலம் காரணமாக இரவு நேரத்தில் தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து, தூக்க மாத்திரை வழங்குவது வழக்கம். இதன்படி, திருச்சி மத்திய சிறையில் உள்ளவர்களில், 140க்கும் மேற்பட்டோருக்கு, இரவு நேரத்தில், 'டைஜிபார்ம், அல்பாராக்ஸ்' என்ற இரு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தூக்கத்துக்கான மாத்திரையில் போதையில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்பதை உணர்ந்த மற்ற கைதிகள், இந்த மாத்திரையை வாங்கி, பகலில் போதை மாத்திரையாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். தற்போது, சிறையில் உள்ளவர்களில், 250க்கும் மேற்பட்டோர், இந்த மாத்திரைகளை, எந்த பிரச்னையும் இல்லாமல், போதைக்காக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.
மாத்திரையை பயன்படுத்துவோர் வாங்கி, அதை போதைக்கு, தேவைப்படும் கைதிக்கு நல்ல விலைக்கு விற்று வருகின்றனர். அதேபோல், சிறை மருத்துவமனை ஊழியர்கள் சிலரும், மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறுகிறார்கள் என்கிற தகவலும் வெளியனாது.
இந்நிலையில் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளராக இருந்த நிகிலா ராஜேந்திரன் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் கூடுதல் கண்காணிப்பாளராக முருகேசன் பதவி உயர்வு பெற்று சிறை கண்காணிப்பாளராக நியமனம் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல புழல், கோவை, சேலம் உட்பட பல்வேறு மத்திய சிறைகளின் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அதிரடி டிரான்பர் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது சிறைத்துறை அதிகாரிகள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.