புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் (பாரம்பரிய காஸ்கிரஸ் குடும்பம்) தர்ம.தங்கவேல். சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்து ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இவரது தம்பி தர்ம.ராமகிருஷ்ணன் (39). இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல வேட்பாளர் தர்ம.தங்கவேலுவுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதால் வாக்கு எண்ணிக்கையில் கூட கலந்துகொள்ள முடியவில்லை. மேலும், அவரது குடும்பத்தினரும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் டி.ராமு. இவருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று ஏற்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கரோனா தொற்றுக்கு இளைஞர்களும் பாதிக்கப்பட்டு அதிகமாக உயிரிழக்க நேரிடுவது குறிப்பிடத்தக்கது.