திருச்சியில் அமைந்துள்ள ஸ்டெம் பூங்காவின் முகப்பு பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய மநீம கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரும், திருச்சி மண்ணின் மைந்தருமான சர் சி.வி.ராமன் அவர்களது பெயரில் திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் பஞ்சக்கரை சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 15.55 கோடி ரூபாயில் பிரம்மாண்ட பொருட்செலவில் குழந்தைகளின் அறிவு திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது "ஸ்டெம் பூங்கா". ஆனால், பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்டெம் பூங்கா முகப்பு பகுதியில் திருச்சி மாநகராட்சியின் குப்பை தரம் பிரிக்கும் மையம் தொடர்ந்து துர்நாற்றத்துடன், கொசு உற்பத்தி மையமாக செயல்பட்டு வருகிறது.
திருச்சி மாநகர மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டிய திருச்சி மாநகராட்சி பூங்காவில் கட்டணம் கொடுத்து விளையாட வரும் சிறுவர், சிறுமியர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டாமா? மேலும் குழந்தைகளுக்கு பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என்பதோடு, குழந்தைகளுக்கு எளிதில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாதா? இந்த ஸ்டெம் பூங்கா முகப்பு பகுதியிலேயே குப்பை தரம் பிரிக்கும் மையம் தொடர்ந்து செயல்பட்டால் எந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை கடும் துர்நாற்றம் மற்றும் கொசு கடிக்கிடையே இந்த பூங்காவிற்கு அழைத்து வருவார்கள்? காசு கொடுத்து எந்த பெற்றோர் நோய்த் தொற்றை தங்களது குழந்தைகளுக்கு விலைக்கு வாங்கத் துணிவார்கள்?
மேலும், இந்த குப்பை தரம் பிரிக்கும் மையத்தால் பொதுமக்களின் வரி பணத்தில் பல கோடி ரூபாய் பொருட்செலவில் துவங்கப்படும் ஒரு நல்ல திட்டம் அதன் இலக்கை அடைய முடியாமல் போக வாய்ப்புள்ளது. எனவே, மக்களின் இன்னல்களுக்கு உடனடி தீர்வு கண்டு வரும் திருச்சி மேயர் திரு.மு.அன்பழகன், சிறந்த மருத்துவரான திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள ஸ்டெம் பூங்கா முகப்பு பகுதியில் உள்ள இந்த குப்பை தரம் பிரிக்கும் மையத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து உரிய உத்தரவிட மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” எனக் கூறப்பட்டுள்ளது.