தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடந்த மாதம் ஏழை எளியவர்களுக்கும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் இலவசமாக 5 கிலோ கொண்டைக்கடலை வினியோகம் செய்ய உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட புறநகர்ப் பகுதிகளில் இயங்கக்கூடிய நியாய விலைக் கடைகள், பண்டகசாலைகள் எல்லாவற்றிலும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இந்த டிசம்பர் மாதத்திலிருந்து நகரப் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கான கொண்டைக்கடலை வழங்கப்பட்டு வரும் நிலையில், பல நியாய விலைக் கடைகளில் இருப்பு இல்லாமல் உள்ளது.
இந்நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி நியாயவிலைக்கடை கடைகளில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த கொண்டைக்கடலை ஆனது கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. நியாய விலை கடைகளில் இருப்பு இல்லாத சமயத்தில் கொண்டைக்கடலை மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வெளிச் சந்தைகளில் கிடைக்கக் கூடிய தரமான கொண்டைக்கடலையின் விலை 1 கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரசு வழங்கக்கூடிய இந்த இலவச கொண்டைக்கடலை தரம் இல்லாமல் குப்பைகள் கலந்து, வண்டுகள் கலந்து வழங்கப்படுகிறது அப்படித் தரம் இல்லாத அந்த கொண்டைக்கடலைகளையும் கள்ளச் சந்தைகளில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அரசு, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.