தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தாக்கலாகும் இ-பட்ஜெட்டை, கணினித் திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், சட்டப்பேரவை சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். அதனைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் துவங்கினார். ஆனால் சில நொடிகளிலேயே அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து நிதியமைச்சர் உரையில், ''6 மாதங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது .நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும். அரசின் நிதிநிலையைச் சீர்படுத்துவோம் என மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம். ஒரே ஆண்டில் முடிக்க இயலாத அளவுக்குப் பணி மிகக்கடுமையாக உள்ளது. நிதிச் சிக்கலை சீர் செய்ய 2, 3 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். மாநில அரசின் நிதியைத் திசைதிருப்பும் வகையில் ஒன்றிய அரசின் வரிமுறை இருக்கிறது'' எனப் பேசி வருகிறார்.