திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றபோது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் கடந்த மாதம் 21ஆம் தேதி அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளான மணிகண்டன் மற்றும் இரண்டு சிறார்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன் தற்போது சிறையில் உள்ளார். மீதமுள்ள இரண்டு சிறுவர்களும் சிறார் பள்ளியில் உள்ளனர். இந்நிலையில், மணிகண்டனை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (16.12.2021) நடந்தது.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், “இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக உள்ளதாலும், கொலை செய்யப்பட்டது காவல் உதவி ஆய்வாளர் என்பதாலும், விசாரணை நிலுவையில் உள்ளதாலும் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் ஆய்வுசெய்த மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், மணிகண்டன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.