தமிழ்நாடு முழுக்க ஊரக வளர்ச்சித் துறையில் இருபத்தி இரண்டு ஆயிரம் ஊராட்சி செயலாளர்கள், பணியாளர்கள் உள்ளார்கள். கடந்த 3ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊராட்சி செயலர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது என்றும் எழுத்துரு அலுவலர்க்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளாட்சி அலுவலகங்களில் பணியிட குறைப்பை கைவிட வேண்டும் காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என 21 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்ட அறிவிப்பை சென்ற மாதமே வெளியிட்டனர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம்.
ஆனால் இத்துறை அமைச்சரான வேலுமணி இவர்களை அழைத்து பேசவில்லை. துறை அதிகாரிகளும் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாததால் திட்டமிட்டபடி 3ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோட்டில் இன்று தாலூக்கா அலுவலக வளாகத்தில் அச்சங்கத்தின் மாநில செயலாளர் பாஸ்கர் பாபு தலைமையில் அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் கிராமப்புற ஊராட்சி செயல்பாடுகள் முடங்கிப் போய் உள்ளது. உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் பூட்டியே கிடக்கும் என்கிறார்கள்.