Skip to main content

பிரபல ரவுடியை தூக்கிய போலீஸ்! கிலியில் திருச்சி ரவுடிகள்! 

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Trichy pattarai suresh taken by police

 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குருச்சியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் என்பவரை திருச்சி மாவட்ட எல்லையான சனமங்கலம் காப்புக்காடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்கவுண்டர் முறையில் திருச்சி போலீசார் சுட்டுக் கொன்றனர்.

 

அந்த பரபரப்பு திருச்சியில் இன்னும் அடங்காத நிலையில், திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம்மாடிப்பட்டி அடைக்கல அன்னை நகரைச் சேர்ந்த ஜெபஸ்டின் மகன் சுரேஷ் (எ) பட்டறை சுரேஷ் (வயது 41) என்ற பிரபல ரவுடியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இவர் மீது தமிழக முழுவதும் கொலை, கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு அதில் பல வழக்குகள் முடிக்கப்பட்டு சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுரேஷ் ஐ.ஜே.கே கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவரது மனைவி சுதா பிரியா கிழக்குறிச்சி ஊராட்சியின் துணை தலைவராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 

இந்த நிலையில் நேற்று இரவு சுரேஷ், வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த போலீசார் விசாரணைக்கு என பட்டறை சுரேஷை அழைத்துச் சென்றனர். அப்படி சுரேஷை அழைத்துச் சென்ற போலீசார் யார் எதற்காக அழைத்துச் சென்றார்கள் என்பது கூட தெரியாத நிலையில், திருச்சி ரவுடிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. போலீசார் பட்டறை சுரேஷை என்கவுண்டர் செய்வதற்காக அழைத்துச் சென்றார்களா? என்ற கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக திருவெறும்பூர் போலீசார் தான் அவரை அழைத்துச் சென்றார்கள் என்பது தெரிந்ததும் சற்று நிம்மதி அடைந்தாலும் உடனடியாக அவரது குடும்பத்தார் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தபொழுது அங்கு பட்டறை சுரேஷ் இல்லை.

 

இந்த நிலையில் திருவெறும்பூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் வைத்து சுரேஷிடம் டி.எஸ்.பி (பொ) சீனிவாசன் தலைமையில் போலீசார் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து நேற்று இரவு என்ன நடக்கப்போகிறது அடுத்து ஒரு என்கவுண்டரா? என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இப்பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டது. அதாவது யார் அழைத்தது என வெளியில் தெரியாமலேயே விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், பிரபல ரவுடி பட்டறை சுரேஷிடம் சட்ட விரோத செயல்களில் இனி ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்ததாக போலீசார் தரப்பிலே கூறப்பட்டுள்ளது.

 

திருச்சியின் பிரபல ரவுடிகளில் ஒருவரான பட்டறை சுரேஷ் தற்போது ஒரு கட்சியில் பொறுப்பு வகித்து வரும் நிலையில், அவரை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்ற போலீசார் சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கி அனுப்பியதாக வெளியிட்டு இருப்பது மாவட்டத்தில் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சேலத்தில் சக்கை போடு போடும் போதை மாத்திரை கும்பல்; பிடிபட்ட அதிர்ச்சி தகவல்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Salem addiction pills

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள், உடல்  உழைப்புத் தொழிலாளர்கள் கள், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட மாற்று போதைப் பொருட்களைத் தேடிச்செல்கின்றனர். குறிப்பாகச் சேலத்தில் இளைஞர்கள் அண்மைக் காலமாக போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. தூக்க மாத்திரைகள், ஆல்கஹால் அதிகமுள்ள சிரப் வகை  மருந்துகள், வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. ஆனாலும் விதிகளை மீறி சில மருந்துக் கடைகளில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு  வருவது தொடர்கிறது.

மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது மருந்து கடைகளில் சோதனை நடத்தி, விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும்,  இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இந்நிலையில், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் நான்கு சாலை பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், சேலம் செவ்வாய்ப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(22),  தட்சணாமூர்த்தி(22), வீரபாண்டி ராஜ வீதியைச் சேர்ந்த அர்ஜூனன்(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள், நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள மருந்து விற்பனை பிரதிநிதிகள் சிலரிடம் நேரடியாக வலி நிவாரணி மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி போதைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றைக்  கூலித்தொழிலாளர்கள், இளைஞர்களைக் குறி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனையும் செய்துள்ளனர். பத்து  மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 100 ரூபாய்க்கு வாங்கி, அதை 200 ரூபாய்க்கு விற்று வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900  மாத்திரைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப் பிறகு, சேலம் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் குறித்தும், பிடிபட்ட இளைஞர்களுடன்  வேறு யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர். இளைஞர்களின் புதிய போதைக் கலாச்சாரம், சேலம் மக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி  உள்ளது. 

Next Story

94,737 மது பாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
94,737 bottles of liquor destroyed by road roller

அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் ஒன்றாக சேர்த்து கிடங்கில் வைத்திருந்தனர்.

அந்தப் பாட்டில்கள் ரோடு ரோலர் வாகனம் கொண்டு உடைத்து அழிக்கப்பட்டது. சுமார் 94,737 மது பாட்டில்கள் தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். மது பாட்டில்கள் சாலையில் அடுக்கி வைக்கப்பட்டு ரோடு ரோலர் வைத்து நொறுக்கப்பட்டு அழிக்கப்படும் அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.