வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள பசுமாத்தூர் கிராம அம்பேத்கர் தெருவில் உள்ள ஒரு மின் கம்பம் சேதமடைந்துள்ளது. மின்கம்பத்தை மாற்றித் தரக்கோரி அப்பகுதி மக்கள் மின் நுகர்வோர் சேவை மைய வாட்ஸ் அப் எண்ணிற்குப் புகார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பத்தினை மாற்றி புதிய மின்கம்பத்தை நிறுவியுள்ளனர். அதன் பின்னர் அம்மனாகுப்பம் மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரியும் பஞ்சாட்சரம் என்பவர் பொதுமக்களிடம் பணம் கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், கம்பம் மாற்றியதற்கு ஒரு ரூபா கொடுக்கல... நாளைக்கு திடீர்னு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நாளைக்கு வந்து செய்ய முடியுமா? இந்த கம்பத்தில் இருந்து ஆறு வீடுகளுக்கு லைன் போகுது. நான் செலவு செய்தவரை கொடுங்கள். 300 ரூபாய் போட்டு ஆறு வீட்டுக்கு வாங்கி கொடுங்கள் என்று பேசி முடித்துவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.
இது குறித்து குடியாத்தம் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதியிடம் பேசியபோது, "விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட மின் பாதை ஆய்வாளரிடம் விளக்கம் கேட்கப்பட்ட பிறகு துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்," எனக் கூறினார்.