திருச்சி தேசிய சட்டக்கல்லூரியில் படித்த பஞ்சாப் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர் சித்தாந்த் சிங். (24 வயது). இவர் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேசிய சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு எல்.எல்.பி படித்து வருகிறார்.
கரோனோ வைரஸ் காரணமாக தேசிய சட்டக்கல்லூரி விடுமுறை விடப்பட்டு விடுதிகள் மூடப்பட்டது. இந்த கல்லூரியில் பெரும்பாலும், வெளிமாநில மாணவர்களே படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சித்தாந்த் சிங் என்பவர் கல்லூரியில் இருந்து வெளியேறி திருச்சி மாநகரில் மன்னார்புரம் அருகே உள்ள நடுத்தெருவில் கடந்த ஜீன் 1ம் தேதி முதல் தங்கியிருந்திருக்கிறார்.
கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. ஆனால் உட்புறம் தாழ்டப்பட்டிருந்த அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற கண்டோன்மென்ட் போலிசார் அந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, உள்ள சித்தாந்த் சிங் முகத்தை பிளாஸ்டிக் கவரினால் மூடி முடிச்சு போட்டுக்கொண்டு தன்னை தானே மூச்சு விட முடியாமல் செய்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
உடலை கைப்பற்றிய கண்டோன்மென்ட் போலீஸ் அவருடைய பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
வெளிமாநிலத்தில் இருந்து தேசிய சட்டக்கல்லூரியில் வந்து படிக்கும் மாணவர் ஒரு பேரழிவு காலத்தில் வீட்டிற்கு சென்று விட்டாரா என்பதை உறுதிபடுத்தாமலே இருந்ததும், கல்லூரியின் கவனக்குறைவே என்கிறார்கள்.
கல்லூரியில் மிக நன்றாக படிக்கும் மாணவன் என்று பெயர் எடுத்த ஒருவனின் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்று விட்டதே என்று வருத்தப்படுகிறார்கள்.